இலங்கையில் உப்பு பற்றாக்குறை – கடும் நெருக்கடியில் உணவகம் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள்

சந்தையில் உப்பு பற்றாக்குறையால் உணவக உரிமையாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இருப்பு 3 மாதங்களுக்கு போதுமானது என்று உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி. நந்தநாதலக குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 15 ஆம் திகதி முதல், ஹம்பாந்தோட்டை, ஆனையிறவு மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் உப்பு அறுவடை செய்ய முடியாததால் சந்தையில் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பற்றாக்குறையால், ஒரு கிலோ உப்பு விலை 350 முதல் 400 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
எனினும் உப்புத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை உப்பை இறக்குமதி செய்ய இரண்டு அரசாங்க உப்பு நிறுவனங்களுக்கும் தனியார் வர்த்தகர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக லங்கா உப்பு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.