புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான மெக்சிகன் கடற்படை கப்பல் – இருவர் பலி

மெக்சிகோவைச் சேர்ந்த கடற்படைக் கப்பல் ஒன்று, புரூக்ளின் பாலத்தின்மீது மோதியதில் அதன் கொடிக்கம்பங்களின் நுனிப்பகுதி சேதமடைந்துள்ளது.
ஈஸ்ட் ரிவர் ஆற்றுப்பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில் 19 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் நால்வருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்தார். அந்த நால்வரில் இருவர் உயிரிழந்ததாக மேயரின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்தபோதும் 142 வயது பழைமை வாய்ந்த புரூக்ளின் பாலம் கடுமையாகச் சேதமடையவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மின்சாரத் தடையும் இயந்திரக் கோளாறும் இதனை விளைவித்திருக்கலாம் என நம்புவதாக அந்நாட்டுக் காவல்துறையினர் கூறுகின்றனர்.
277 பேர் இருந்த அந்தக் கப்பல் பாலத்தை மோதியபோது கொடிக்கம்பங்கள் முறிந்ததை, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் எடுத்த காணொளிகள் காட்டுகின்றன.
சம்பவத்தின்போது பாலத்தில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்ததை அந்தக் காணொளிகள் காட்டின.பின்னர் அந்தக் கப்பல், ஆற்றின் கரையை நோக்கி நகர்ந்தபோது கரையில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
‘குவாவுத்தேஹ்மொக்’ என்ற பெயருள்ள இந்தக் கப்பல், மாலுமிகளுக்கும் கடற்படை அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. எஃகினால் பெரும்பகுதி செய்யப்பட்ட இந்தக் கப்பல், 1982ல் செயல்படத் தொடங்கியது. இதன் நீளம், கிட்டத்தட்ட 91 மீட்டர்.
இவ்வாண்டு ஏப்ரல் 6ல் தனது பயணத்தைத் தொடங்கிய குவாவுத்தேஹ்மொக் கப்பல், தன்னுடன் கப்பல் பயணத்தின் உணர்வுகளை உயர்த்தி, கடற்துறைக் கல்வியை வலுப்படுத்தி, மெக்சிக்கோ மக்களின் அமைதியையும் நல்லெண்ணத்தையும் உலகின் கடல்களுக்கும் துறைமுகங்களுக்கும் கொண்டுசெல்ல விரும்பியதாக மெக்சிக்கோவின் கடற்படை குறிப்பிட்டிருந்தது.
நியூயார்க், கிங்ஸ்டன், ஹவானா, ரெய்க்ஜாவிக், ஐஸ்லாந்து, அபர்டீன், ஸ்காட்லாந்து, அவில்ஸ், ஸ்பெய்ன், பிரிட்ஜ்டவுன், லண்டன் ஆகியவற்றைக் காண்பதற்கான 254 நாள் பயணம் அந்தக் கப்பலுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது.