ஈரானுக்கு இரண்டே தீர்வுகள்தான்! – ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

ஈரானுக்கு இரண்டே தீர்வுகள்தான் உள்ளதென மெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டத்தைப் பொறுத்தவரை, புத்திசாலித்தனமான தீர்வு வேண்டுமா அல்லது கொடூரத் தாக்குதல் வேண்டுமா என்பதை அந்நாடு முடிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. அணு ஆயுத உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் அமெரிக்கா தொடர்ந்து ஈரானை எச்சரித்து வருகிறது. இந்நிலையில், கத்தார் தலைநகர் தோஹா வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மன்னர் (அமிர்) தமீம் பின் ஹமாத் அல் தானியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து வணிகத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்வது அல்லது வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வது என இரண்டு தீர்வுகள் மட்டுமே அந்நாட்டுக்கு உள்ளன. பிரச்சினையை மிருகத்தனமான முறையில் அல்லாமல், புத்திசாலித்தனமான முறையில் தீர்க்க முடியுமா என்று பார்க்க விரும்புகிறோம். புத்திசாலித்தனம் அல்லது மிருகத்தனம் என இரண்டு மட்டுமே உள்ளன. அவை இரண்டுதான் மாற்று வழிகள்.
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக ராஜதந்திர ஒப்பந்தத்துக்கு கத்தாரின் ஆளும் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி அழுத்தம் கொடுத்து வருகிறார். ஈரான், அமீரைப் பெற்றிருப்பது அதன் அதிர்ஷ்டம். ஏனென்றால் அவர் உண்மையில் அவர்களுக்காகப் போராடுகிறார். ஈரான் மீது நாம் ஒரு கொடூரமான தாக்குதல் நடத்துவதை அவர் விரும்பவில்லை. அவர், ‘நீங்கள் ஒரு ஒப்பந்தம் செய்யலாம்’ என்று கூறுகிறார். ஈரான் அமீருக்கு ஒரு பெரிய நன்றி சொல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று ட்ரம்ப் கூறினார்.