ஒராங்குட்டான் குட்டிகளைக் கடத்தியதற்காக தாய்லாந்து நாட்டவர் ஒருவர் கைது

ஓராங் குட்டான் குட்டிகள் இரண்டைக் கடத்திவந்த சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரைக் கைது செய்ததாகத் தாய்லாந்துக் காவல்துறை வியாழக்கிழமை (மே 15) தெரிவித்துள்ளது.
47 வயதாகும் அந்த நபர், புதன்கிழமை, பெட்ரோல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டார் என்றும் அவர் வாடிக்கையாளரிடம் அந்தக் குரங்குக் குட்டிகளை ஒப்படைக்கத் தயாராகிய நிலையில் பிடிபட்டார் என்றும் காவல்துறை கூறியது.
இரண்டு குட்டிகளில் ஒன்று கிட்டத்தட்ட ஒரு வயது நிரம்பியது என்றும் மற்றொன்று பிறந்து ஒரு மாதமே ஆன ஓராங் குட்டான் குட்டி என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவை இரண்டும் diapers அணிவிக்கப்பட்டு, பால் புட்டிகளுடன் பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்ததைக் காவல்துறை வெளியிட்ட படங்கள் காட்டுகின்றன.
அமெரிக்க மீன்வள, வனவிலங்குச் சேவையும் போதைப்பொருள், குற்றச்செயல்களுக்கு எதிரான ஐக்கிய நாட்டு நிறுவன அலுவலகமும் இணைந்து மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
போர்னியோ, சுமத்ரா காடுகளுக்குச் சொந்தமான ஓராங் குட்டான் குரங்குகள் அழிந்துபோகும் அபாயத்தை வெகுவாக எதிர்நோக்கும் விலங்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. உலக அளவில் ஆக அதிகம் கடத்தப்படும் விலங்குகளும் அவைதான்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்த ஓராங் உத்தான் குட்டிகள் ஏறக்குறைய 300,000 பாட் (S$11,679) தொகைக்கு விற்கப்பட்டதாக நம்பப்படுவதாகத் தாய்லாந்துக் காவல்துறை கூறியது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த நபருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அவரை இச்செயலில் ஈடுபட வைத்த குற்றக் கும்பலைக் கண்டுபிடிப்பது தொடர்பில் விசாரணை தொடர்வதாகக் காவல்துறை தெரிவித்தது.