உலகின் ஏழ்மையான ஜனாதிபதி ஜோஸ் முஜிகா காலமானார்!

உருகுவேயின் அதிபரான முன்னாள் கெரில்லா போராளி ஜோஸ் முஜிகா, 89 வயதில் காலமானார்.
“உலகின் மிகவும் எளிமையான ஜனாதிபதி” என்று அழைக்கப்படும் முஜிகா ஒரு சாதாரண பண்ணை வீட்டில் வசித்து வந்தார்.
மேலும் நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகித்தபோதும் கூட, தனது சம்பளத்தின் பெரும்பகுதியை தியாகம் செய்தார்.
சிறையில் இருந்து ஜனாதிபதி பதவிக்கு வந்த அவரது வாழ்க்கை பயணம், அவரை லத்தீன் அமெரிக்காவின் மிகவும் தனித்துவமான மற்றும் போற்றப்படும் தலைவர்களில் ஒருவராக மாற்றியது.
மே 20, 1935 அன்று மான்டிவீடியோவில் பிறந்த முஜிகா ஒரு சாதாரண குடும்பத்தில் வளர்ந்தார். சிறு விவசாயியான அவரது தந்தை, முஜிகா இளமையாக இருந்தபோதே உயிரிழந்தார்.
இதனையடுத்து பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட அவர், தனது டீனேஜ் வயதில் இடதுசாரி அரசியலில் ஈடுபட்டார். 1960களில், உருகுவேயின் இராணுவ ஆதரவு ஆட்சியை எதிர்த்துப் போராடிய நகர்ப்புற கெரில்லா குழுவான டுபமரோஸில் சேர்ந்தார். இந்தக் குழு கடத்தல்கள் மற்றும் கொள்ளைகள் உள்ளிட்ட ஆயுதமேந்திய நடவடிக்கைகளை மேற்கொண்டது.
1972 ஆம் ஆண்டு முஜிகா கைது செய்யப்பட்டார். அவர் 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார், அங்கு அவர் சித்திரவதை செய்யப்பட்டு கடுமையான நிலைமைகளில் வைக்கப்பட்டார். அவர் அந்த நேரத்தில் பெரும்பகுதியை சிறிய அறைகளில், பெரும்பாலும் நிலத்தடியில், வெளி உலகத்துடன் மிகக் குறைந்த தொடர்புடன் தனியாகக் கழித்தார்.
1985 ஆம் ஆண்டு உருகுவேயில் ஜனநாயகம் திரும்பியபோது அவர் விடுவிக்கப்பட்டார்.
இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணியான பரந்த முன்னணியில் சேர்ந்தார். முஜிகா பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் விவசாய அமைச்சராகப் பணியாற்றினார். தனது வெளிப்படையான பேச்சு மற்றும் கிராமப்புற சமூகங்களுடனான தொடர்புக்காக உருகுவே அரசியலில் ஒரு முக்கிய நபராக ஆனார்.
2009 ஆம் ஆண்டு, அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு வலுவான ஆதரவுடன் வெற்றி பெற்றார். 2010 முதல் 2015 வரை அவரது தலைமையின் கீழ், கஞ்சா உற்பத்தி மற்றும் விற்பனையை சட்டப்பூர்வமாக்கிய உலகின் முதல் நாடாக உருகுவே ஆனது. அவரது அரசாங்கம் ஒழுங்குபடுத்தப்பட்ட நிபந்தனைகளின் கீழ் ஒரே பாலின திருமணம் மற்றும் கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டங்களையும் இயற்றியது.
ஜனாதிபதியாக இருந்தபோது, முஜிகா ஜனாதிபதி மாளிகையில் வசிக்க மறுத்துவிட்டார். அவர் மான்டிவீடியோவிற்கு வெளியே உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கி, தனது சம்பளத்தின் பெரும்பகுதியை (90 சதவீதம்) தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.