பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்த 21 பேர் மரணம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
முன்னதாக அமிர்தசரஸ் மாவட்டம் பால்ஹாலி, படலர்புரி மற்றும் மராரிகலன், தேர்வல் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகள், வேலை முடிந்ததும் அருகில் உள்ள மஜிதா என்ற காட்டுப்பகுதிக்கு சென்று சாராயம் அருந்துவது வழக்கம்.
வீட்டுக்கு சென்ற தொழிலாளர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களது உறவினர்கள் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்கள் குடித்தது விஷ சாராயம் என தெரியவந்தது. இதில் 14 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தநிலையில் தற்போது பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே விஷ சாராயம் விற்றதாக 10 பேரை போலீசார் கைது செய்தனர். மெத்தனால் வினியோகம் செய்த ஒரு முக்கிய குற்றவாளியான சாஹிப் சிங் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே விஷ சாராய விற்பனையை தடுக்க தவறியதாக மஜிதா பகுதி துணை போலீஸ் சூப்பிரண்டு அமோலாக் சிங், போலீஸ் அதிகாரி அவதார் சிங் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.