அமெரிக்கா – பென்சில்வேனியாவில் நடந்த சாலை விபத்தில் இரு இந்திய மாணவர்கள் பலி

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் கடந்த சனிக்கிழமை (மே 10) நேர்ந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சௌரவ் பிரபாகர், 23, மானவ் பட்டேல், 20 என்ற அவ்விருவரும் சென்ற கார் சாலைத் தடத்திலிருந்து விலகி ஒரு மரத்தின்மீது மோதி, பின்னர் பாலத்தின்மீது மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவ்விபத்தில் காரின் ஓட்டுநரும் பின்னிருக்கையில் இருந்த பயணி ஒருவரும் நிகழ்விடத்திலேயே இறந்துவிட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இன்னொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
இத்துயரச் சம்பவம் குறித்து நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. அவ்விரு மாணவர்களும் கிளீவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்ததை அது உறுதிப்படுத்தியது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகக் குறிப்பிட்ட தூதரகம், தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளது.