இந்தோனீசியாவில் காலாவதியான ஆயுதங்களை அகற்றியபோது வெடி விபத்து; பலர் உயிரிழப்பு

இந்தோனீசியாவில் காலாவதியான ராணுவ ஆயுதங்களை அகற்றும் நடவடிக்கையின்போது ஏற்பட்ட வெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஜாவா மாநிலத்தில் திங்கட்கிழமை (மே 12) இச்சம்பவம் நிகழ்ந்தது. இது, ஓராண்டுக்கு சற்று அதிகமான காலத்தில் இந்தோனீசியாவில் காலாவதியான ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட இரண்டாவது சம்பவமாகும்.
உயிரிழந்தவர்களில் ஒன்பது பேர் பொதுமக்கள், நால்வர் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்று ராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் கிறிஸ்டொமெய் சியான்டூரி கம்பஸ் டிவி ஊடகத்திடம் தெரிவித்தார். வெடிப்புக்குப் பின்னால் உள்ள காரணத்தை அறிய ராணுவம் விசாரணை நடத்திவருவதாக அவர் கூறினார்.
மற்றொரு ராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் ஜெனரல் வாஹ்யு யுதயானா, காலாவதியான ஆயுதங்களை அகற்றும் நடவடிக்கை நிறைவடையவிருந்த வேளையில் வெடிப்பு நேர்ந்ததாகத் தொலைக்காட்சிவழி தெரிவித்தார்.
காலாவதியான ஆயுதங்கள் வெடிக்க வைக்கப்பட்டு அகற்றப்படும்; அந்தப் பகுதிக்கு மிக அருகே எப்படி பொதுமக்கள் இருந்தனர் என்பதை அறிந்துகொள்வதும் விசாரணையின் நோக்கங்களில் அடங்கும்.
வெடிப்பு நேர்ந்த பகுதி, பொதுவாக இத்தகைய ஆயுதம் அகற்றும் நடவடிக்கைகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் பகுதி என்று தெரிவிக்கப்பட்டது.