பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த இந்தியர் இருவர் பஞ்சாப்பில் கைது

இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர்க்காக உளவுபார்த்த சந்தேகத்தின்பேரில் இருவரை பஞ்சாப் மாநிலக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
இந்திய ராணுவத்தினரின் நடமாட்டம் குறித்த தகவல்களை அவர்கள் பகிர்ந்துகொண்டதாகப் பஞ்சாப் மாநிலக் காவல்துறைத் தலைவர் கௌரவ் யாதவ் எக்ஸ் ஊடகம் வழியாகத் தெரிவித்தார்.
ரகசியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டமைக்காக அவர்களுக்கு இணையம் வழியாகப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது முதற்கட்ட விசாரணைமூலம் தெரியவந்துள்ளது என்றும் திரு யாதவ் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களிடமிருந்து இரு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதனிடையே, எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பஞ்சாப் காவல்துறையினரும் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின்மூலம் எல்லைப் பகுதியில் ஆயுதங்களைச் சுமந்துவந்த ஆளில்லா வானூர்திகள் பிடிபட்டன.
அமிர்தசரஸ், ஃபெரோஸ்பூர் பகுதிகளில் ஆர்டிஎக்ஸ் வெடிபொருள், கையெறிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஆளில்லா வானூர்திகள்மூலம் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும் வழக்கு பதியப்பட்டு, விசாரணை நடந்துவருகிறது.