ஜெர்மனியில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த திட்டம்
ஜெர்மனியின் பேர்லின் 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து கற்பனை செய்ய முடியும் என அந்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் தெரிவித்துள்ளார்.
1936ஆம் ஆண்டு பேர்லின்’ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று 100 வருடங்கள் பூர்த்தியாகும் வேளையில் மீண்டும் அங்கு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து ஆராயப்படுகிறது.
1936 ஆம் ஆண்டின் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா பேர்லின் நகரில் நடைபெற்றது.
அவ்வருட குளிர்கால ஒலிம்பிக் விழாவும் ஜேர்மனியின், ஜேர்மிஷ் பார்டேன்கேர்சென் நகரில் நடைபெற்றன. சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் அப்போட்டிகள் நடைபெற்றன.
இந்நிலையில் அமைச்சர் நான்சி ஃபேசர் அளித்த செவ்வியொன்றில், ‘1936ஆம் ஆண் டின் போட்டிகள் பயங்கரமானவை. அப்போட்டிகளை தமது ஆட்சிக்கான பிரச்சாரங்களுக்காக நாஸிகள் ஏற்பாடு செய்தனர்.
அப்போட்டிகள் நடைபெற்ற இடத்திலேயே விசேட வழியில் மீண்டும் போட்டிகளை நடத்துவது குறித்து கற்பனை செய்ய முடியும். 1936 ஆம் ஆண்டின் போட்டிகளின் தன்மையை எடுத்துக்காட்டுவதற்கும் உலகில் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கும் ஜேர்மனி அதிக வேலைகளை செய்ய வேண்டியிருக்கும’ என்றார்.
இப்போட்டிகளை நடத்துவதற்கு விண்ணப்பிப்பதை தான் வெகுவாக ஊக்குவிப்பதாக அவர் கூறினார்.
2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின்போது, வரவேற்பு நாடான கத்தாரின் மனித உரிமைகள் நிலைவரத்தை ஜெர்மனி கடுமையாக விமர்சித்திருந்தது.
1936 ஆம் ஆண்டின் பின்னர் 1972 ஆம் ஆண்டின் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை ஜெர்மனி நடத்தியிருந்தது.
எதிர்வரும் கோடைக் கால ஒலிம்பிக் போட்டிகள் 2024ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெறவுள்ளன. 2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸிலும் 2032 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.