ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேலில் இராணுவ நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் திட்டம்

இராணுவ நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை நேற்று இரவு கூடி இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
தொடர்ச்சியாகப் பல மாதங்களுக்குத் தரைவழித் தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு அமைச்சர்கள் ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காசாவை கைப்பற்றுவதும், கைப்பற்றிய பிரதேசங்களைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதும் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயல்பாட்டிற்கு அமைய இஸ்ரேலிய இராணுவம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், பல்லாயிரக்கணக்கான விசேட துணை படையணிகளும் நிரந்தர சேவைக்காக அழைக்கப்பட்டுள்ளன.
மிகுதியாகவுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை மீட்பதுடன், ஹமாஸை தோற்கடிக்கும் நோக்கத்துடன், தொடர்ச்சியாக அழுத்தங்களை இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த வாரம் சம்பந்தப்பட்ட பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டதன் பின்னரே தாக்குதல்கள் முன்னெடுக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய அமைச்சரவை கொள்கையளவில் தொண்டு நிறுவனங்களினூடாக மனிதாபிமான உதவிகளை மீண்டும் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளை, கடந்த இரு மாதங்களாக இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் முற்றுகையினை முடிவிற்குக் கொண்டு வருவதன் அவசியம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி வருகிறது.
அதனைத் தவறும் பட்சத்தில் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள மக்கள் பாரிய உணவுப் பற்றாக்குறையினை எதிர்கொள்வர் என எச்சரிக்கப்பட்டுள்ளது.