சீனாவில் முதுகலைப் பட்டப்படிப்பைக் கைவிட்டு உணவுக்கடை திறந்த இளைஞன்

சீனாவில் முதுகலைப் பட்டப்படிப்பைக் கைவிட்டு உணவுக்கடை ஒன்றைத் திறந்த இளைஞன் தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது.
பேராசிரியரால் ஏற்பட்ட தாங்க முடியாத மன அழுத்தம் காரணமாக மாணவன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த Fei Yu விடாமுயற்சியுடன் படித்து முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடங்கினார். ஆனால் மன அழுத்தம், தூக்கமின்மை, உடல் நலக்குறைவு காரணமாக அவர் பல்கலைக்கழகத்திலிருந்து விலகினார்.
ஓராண்டுக்குப் பின் அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் உபகாரச் சம்பளத்துடன் முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்ள அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.
ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அண்மையில் சில பல்கலைக்கழகங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தியதால் யுவின் உபகாரச் சம்பளம் மீட்டுக்கொள்ளப்பட்டது.
மீண்டும் உயர் கல்வியைத் தொடர முடியவில்லை. ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. தான் படித்த பல்கலைக்கழக வளாகத்தின் வெளியே சிறிய உணவுக்கடை ஒன்றைக் கடந்த மாதம் தொடங்கினார்.
ஒவ்வொரு நாளும் சுமார் 4 மணிநேரம் தயாரிப்புப் பணிகளுக்குப் பின் மாலை 5 மணிக்குக் கடையைத் திறப்பார். 3 மணி நேரத்தில் அவரது தின்பண்டங்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிடும்.
நாள்தோறும் 130 வெள்ளி முதல் 180 வெள்ளி வரை சம்பாதிக்கிறார். கல்வியைத் தொடர முடியாமல் போனாலும் சுயமாக உழைத்துச் சம்பாதிப்பதில் பெருமைகொள்ளவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.