இலங்கை கல்வித் துறையில் ஏற்படவுள்ள மாற்றம் – ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை கல்வித் துறையில் விரிவான மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
வரலாற்று சிறப்புமிக்க ரங்கிரி, தம்புள்ளை ரஜமகா விகாரையில், இன்று பிற்பகல் தங்கவேலிகளுடன் கூடிய போதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
சட்டத்தின் மூலம் மாத்திரம் ஒரு சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியாது. அங்கு மதத் தத்துவத்திற்கு ஒரு பாரிய சமூக வகிபாகம் இருக்கின்றது. கிராமத்தின் விகாராதிபதி உள்ளிட்ட மதத் தலைவர்களுக்கு அந்தப் பணியில் முதன்மையான பொறுப்பு உள்ளது.
அத்தோடு, நாட்டிற்குத் தேவையான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தில் அறிவார்ந்த மற்றும் நல்லொழுக்கங்களுடன் கூடிய எதிர்கால தலைமுறையை உருவாக்க வேண்டும் .
அதற்காக கல்வித் துறையில் விரிவான மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதேபோன்று, எதிர்கால சந்ததியினரைப் போதைப்பொருள் பாவனையிலிருந்து காப்பாற்றுவதற்காக, திட்டமிட்ட வகையில் செயற்படும் போதைப்பொருள் வியாபாரத்தைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார்.