மோசடி வழக்கு: முன்னிலையாக நடிகர் மகேஷ் பாபுக்கு ED அழைப்பாணை

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு.
நிலச்சொத்து சந்தை நிறுவன நிதி மோசடி தொடர்பான வழக்கில் ஏப்ரல் 28ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் முன்னிலையாக வேண்டுமென அவருக்கு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாய் சூர்யா, சுரானா ஆகிய இரு நிலச் சொத்துச் சந்தை நிறுவனத்தின் புதிய திட்டங்களை ஆதரித்து நடிகர் மகேஷ் பாபு விளம்பரம் செய்திருந்தார்.இதற்காக, கிட்டத்தட்ட 59 மில்லியன் ரூபாயைப் பெற்றதாகக் கூறப்பட்டது.இதில் ரூ.34 மில்லியனைக் காசோலையாகவும் ரூ.25 மில்லியனை ரொக்கமாகவும் அவர் வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட சொத்துச் சந்தை நிறுவனங்கள் அப்பணத்தை மோசடிமூலம் பெற்றிருக்கலாம் என அமலாக்கத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அதனால் மகேஷ் பாபுவுக்கு தற்போது அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் சுரானா நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான நரேந்திர சுரானா ‘சாய் சூர்யா டெவலப்பர்ஸ்’ உரிமையாளர்களில் ஒருவரான சதிஷ் சந்திர குப்தா ஆகியோருக்கு எதிராக வந்த புகார்களின் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த மோசடி வழக்கை விசாரித்து வருகிறது.
ஒரே மனையைப் பலருக்கு விற்பனை செய்தது, போலியான பதிவு உத்தரவாதத்தை அளித்தது, ஒழுங்குமுறை சாராத மனை பிரிவுகளுக்கு மனை வாங்க முன்வந்தவர்களிடமிருந்து முன்பணம் பெற்றது என இந்த நிறுவனங்கள் கோடிக் கணக்கிலான ரூபாயை மோசடி செய்ததாகப் புகார் உள்ளது.
இந்த மோசடியில் மகேஷ் பாபுக்கு தொடர்பு இல்லை என்றாலும், அதற்காக இந்த நிறுவனங்களிடமிருந்து அவர் பெற்ற பணம் மோசடிமூலம் பெறப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.