காசா இனப்படுகொலை: இஸ்ரேலியர்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதித்த மாலத்தீவு

காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவும், பாலஸ்தீன மக்களுடனான “உறுதியான ஒற்றுமையை” வெளிப்படுத்தும் விதமாகவும், இஸ்ரேலியர்கள் நாட்டிற்குள் நுழைவதை மாலத்தீவு தடை செய்துள்ளது.
மாலத்தீவு நாடாளுமன்றமான மக்கள் மஜ்லிஸால் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜனாதிபதி முகமது முய்சு திங்களன்று இந்தச் சட்டத்தில் கையெழுத்திட்டார்.
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தும் வரை, ஜூன் 2024 இல், இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அனைவரும் அந்த தீவுக்குள் நுழைய தடை விதிக்க முய்சுவின் அமைச்சரவை ஆரம்பத்தில் முடிவு செய்தது, ஆனால் சட்டத்தின் முன்னேற்றம் தடைபட்டது.
நாட்டின் குடியேற்றச் சட்டத்தைத் திருத்த முயன்ற பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மீகைல் அகமது நசீம், மே 2024 இல் மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை முன்வைத்தார்.
பின்னர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் உட்பட இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களைத் தடை செய்யும் வகையில் நாட்டின் சட்டங்களை மாற்ற அமைச்சரவை முடிவு செய்தது. பல திருத்தங்களுக்குப் பிறகு, 300 நாட்களுக்குப் பிறகு இந்த வாரம் அது நிறைவேற்றப்பட்டது.
“பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் அட்டூழியங்கள் மற்றும் இனப்படுகொலை செயல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை இந்த ஒப்புதல் பிரதிபலிக்கிறது” என்று முய்சுவின் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மார்ச் 18 ஆம் தேதி போர் நிறுத்தம் முறிந்ததிலிருந்து குறைந்தது 1,613 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இது அக்டோபர் 2023 இல் காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கியதிலிருந்து மொத்த இறப்பு எண்ணிக்கையை 50,983 ஆகக் அதிகரித்துள்ளது.
இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.