தனக்கு கிடைத்த விருதை இன்னொருவருக்கு பரிந்துரைத்து தோனி

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், M.S.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில் விளையாடிய LSG அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்திருத்தது.
சென்னை அணி சார்பில் ஜடேஜா, பத்திரனா தலா 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, அன்சுல் கம்போஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். அதன் பிறகு களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்தில் நல்ல தொடக்கத்தை அளித்தாலும், மிடில் ஓவர்களில் மிக நிதானமாக விளையாடி பின்னர் இறுதியில் துபேயின் நிதானமான ஆட்டத்தாலும், கேப்டன் தோனியின் அதிரடியான ஆட்டத்தாலும் 20வது ஓவர் 168 ரன்களை எட்டி CSK அணியை வெற்றிபெற செய்தனர்.
இந்த போட்டியில், 11 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடித்து 26 ரன்கள் விளாசிய கேப்டன் தோனிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. முதல் இன்னிங்சில் ஒரு கேட்ச் மற்றும் தனது மின்னல் வேக ஸ்டம்பிங்கையும் நிகழ்த்தினார். 2019-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடி ஆட்ட நாயகன் விருது வாங்கியதற்கு பிறகு 6 வருடங்கள் கழித்து ஆட்டநாயகன் விருது வாங்கினார் தோனி.
விருது பெற்ற பிறகு பேசிய M.S.தோனி, ” ஏன் எனக்கு இந்த விருது கொடுத்தார்கள் என தெரியவில்லை. நூர் அகமது அற்புதமாக பந்து வீசினார். அவருக்கு இந்த விருது கொடுத்திருக்கலாம். இது ஒரு கடினமான ஆட்டமாக இருந்தது. தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு, இந்த வெற்றி முக்கியமானது. எங்கள் அணியில் பலர் சிறப்பாக செயல்பட்டனர். ஜடேஜாவும் நூர் அகமதுவும் பந்துவீச்சில் அருமையாக செயல்பட்டனர். ஷைக் ரஷீதும் ரச்சின் ரவீந்திராவும் தொடக்கத்தில் நல்ல அடித்தளம் அமைத்தனர். இறுதியாக நானும் ஷிவம் துபேயும் ஆட்டத்தை முடித்தோம்.” என பகிர்ந்து கொண்டார்.
தோனி குறிப்பிட்ட CSK வீரர் நூர் அகமது 4 ஓவர்கள் வீசி மொத்தமாகவே 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அவர் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு கிடைத்த விருதை இன்னொருவருக்கு பரிந்துரைத்து பேசியது, 5 தொடர் தோல்விகளில் இருந்து CSK-வை மீட்டு வெற்றிப்பாதைக்கு திருப்பியது, CSK அணியின் ஃபினிஷராக இறுதிவரை களத்தில் நின்றது என நேற்றைய ஆட்டத்தின் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு CSK ரசிகர்கள் கேப்டன் தோனியை கொண்டாடி வருகின்றனர். இதேபோல அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்று பிளே ஆஃப் தகுதி பெற்றுவிட வேண்டும் என ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.