டிரம்ப் வரிகளால் ஒரே நாளில் மொத்தம் $208 பில்லியனை இழந்த பில்லியனர்கள்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இறக்குமதிகள்மீது பரவலாக வரிவிதிப்பை அறிவித்ததன் விளைவாக, உலகின் 500 பெருஞ்செல்வந்தர்களின் ஒட்டுமொத்த செல்வம் புதன்கிழமை (ஏப்ரல் 2) US$208 பில்லியன் சரிந்தது.
புளூம்பெர்க் பெருஞ்செல்வந்தர்கள் குறியீட்டின் 13 ஆண்டுகால வரலாற்றில் இது நான்காவது ஆகப்பெரிய ஒருநாள் சரிவாகும். அத்துடன், கொவிட்-19 பெருந்தொற்றின் உச்சத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள ஆகப்பெரிய செல்வ இழப்பு இதுவே.
புளூம்பெர்க்கின் செல்வக் குறியீட்டால் கண்காணிக்கப்படும் பாதிக்கும் அதிகமான பெருஞ்செல்வந்தர்களின் செல்வம் சராசரியாக 3.3% குறைந்தது. அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பெருஞ்செல்வந்தர்களில் அமெரிக்காவில் உள்ளோரும் அடங்குவர். மெட்டாவின் மார்க் ஸக்கர்பர்க்கும் அமேசானின் ஜெஃப் பேஸோஸும் இதில் முன்னணி வகிக்கின்றனர்.
அமெரிக்காவுக்கு வெளியே வரிவிதிப்பு பாதிப்பிலிருந்து தப்பிய பெருஞ்செல்வந்தர்களில் மெக்சிகோவின் ஆகப்பெரிய பணக்காரரான கார்லோஸ் சிம்மும் ஒருவர்.
புளூம்பெர்க்கின் செல்வக் குறியீட்டில் நிகர லாபத்தைப் பதிவுசெய்த ஒரே வட்டாரம் மத்திய கிழக்கு.