இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2000 கிலோ கேரள கஞ்சாவுடன் ஆறு பேர் இந்தியாவில் கைது
இந்தியாவில் இருந்து இலங்கையின் வடக்கு கடற்பகுதிக்கு அனுப்ப தயாராக இருந்த 2090 கிலோ கேரள கஞ்சாவுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் கீரைத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதுரை புதுக்குளம் பகுதியில் கேரள கஞ்சா கடத்தப்படுவதாக கீரைத்துறை பொலிசாருக்கு தகவல் கிடைத்ததும், புதுக்குளத்தில் தென்னந்தோப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை அதிகாரிகள் குழு சோதனையிட்டது.
அப்போது லாரியில் இருந்தவர்கள் சர்க்கரையை ஏற்றிச் சென்றதாக பொலிசாரிடம் தெரிவித்தனர்.
அங்கு, சர்க்கரை மூட்டைகள் போன்று தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் பல சாக்கு மூட்டைகள் இருந்ததுடன், பொலிசார் நடத்திய சோதனையில், 2000 கிலோ கேரள கஞ்சா சிக்கியது.
லொறியின் சாரதி உட்பட 06 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது 90 கிலோகிராம் கேரளகஞ்சா மற்றுமொரு காரில் மறைத்து வைக்கப்பட்டு கடத்துவதற்கு தயாராக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட 06 சந்தேக நபர்களில் 04 பேர் இந்திய பிரஜைகள் எனவும் இருவர் இலங்கையர்கள் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் குறித்த கேரள கஞ்சா கையிருப்புகளை தனுஷ்கோடிக்கு கொண்டு சென்று தனுஷ்கோடி ஊடாக வடக்கு கடல் எல்லைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் வாகனங்களையும் கேரள கஞ்சா கையிருப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கீரைத்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.