‘இது வெறும் ஆரம்பமே’: ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல்

காஸாமீது இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், இத்தாக்குதல்கள் ‘வெறும் ஆரம்பமே’ என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
போர்நிறுத்தம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களான வேளையில், அதுகுறித்த உடன்பாட்டை மீறியதாக இஸ்ரேலும் ஹமாஸும் ஒன்று மற்றொன்றை சாடியுள்ளன.
2023 அக்டோபர் 7ல் இஸ்ரேல்மீது ஹமாஸ் முதன்முதலில் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஏறக்குறைய 250 பேரை ஹமாஸ் பிணைபிடித்து வைத்திருந்தது. அவர்களில் 59 பேரை ஹமாஸ் இன்னமும் பிணைக்கைதிகளாக வைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டுகிறது.
இந்நிலையில், போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தர்களின் முயற்சிகளுக்கு இஸ்ரேல் பங்கம் விளைவிப்பதாக ஹமாஸ் சாடியுள்ளது. ஆனால், செவ்வாய்க்கிழமை இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடி தரப்படும் என ஹமாஸ் அச்சுறுத்தவில்லை.
போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பரிந்துரைகளை ஏற்க ஹமாஸ் மறுத்ததால், தாக்குதல்களுக்கு தாம் உத்தரவிட்டதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கூறினார்.கெடுதல் பாதையிலிருந்து விலகி, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி காஸா மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ள அவர், குடிமக்களின் உயிர்ச்சேதத்துக்கு ஹமாஸே காரணம் எனக் குறைகூறினார்.
டெல் அவிவ் நகரில் உள்ள கிர்யா ராணுவத் தளத்திலிருந்து பேசிய அவர், “இனி, ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் இன்னும் பலவந்தமாகச் செயல்படும். இனி, தாக்குதல்களுக்கு மத்தியிலே பேச்சுவார்த்தை இடம்பெறும்,” என எச்சரித்தார்.
“கடந்த 24 மணி நேரத்தில் எங்கள் தாக்குதல்களின் பாதிப்பை ஹமாஸ் உணர்ந்துள்ளது. இது வெறும் ஆரம்பமே என நான் எச்சரிக்கிறேன்,” என்றார் அவர்.
இதற்கிடையே, போர்நிறுத்த உடன்பாட்டில் மத்தியஸ்தர்களான எகிப்தும் கத்தாரும், இஸ்ரேலின் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. போர்நிறுத்த உடன்பாடு முறிக்கப்பட்டதற்கு தான் வருந்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.
இரு வாரங்களுக்கு மேலாக காஸாவுக்கு மனிதாபிமான உதவி வழங்கப்படுவதை இஸ்ரேல் நிறுத்தியுள்ளதால் நெருக்கடிநிலை மோசமடைந்துள்ளது.எனினும், காஸாவில் தாக்குதல் தொடர்வதற்கு ஹமாஸே காரணம் எனப் பழிசுமத்திய ஐக்கிய நாட்டு அமைப்புக்கான தற்காலிக அமெரிக்கத் தூதர் டோரத்தி ஷியே, இஸ்ரேலின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தினார்.
வெள்ளை மாளிகை தேசியப் பாதுகாப்பு மன்றப் பேச்சாளர் பிரையன் ஹியூக்ஸ், “போர்நிறுத்தத்தை நீட்டிக்க ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவித்திருக்கலாம். ஆனால், அதை ஏற்க மறுத்த அது, போரையே தேர்வுசெய்துள்ளது,” என்றார்.