நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு தடை – அதிர்ச்சி கொடுத்த சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனனுக்கு எதிராக தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மரபுகளுக்கு முரணான உறுப்பினரின் நடவடிக்கைகள், அவர் வெளியிட்ட சில அறிக்கைகள் மற்றும் அவரது சமூக ஊடக நடத்தை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த தற்காலிகத் தடை விதிக்கப்படுவதாக சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய, நாடாளுமன்றத்தில் உறுப்பினர் வெளியிட்ட அறிக்கைகளை ஆடியோ, வீடியோ மற்றும் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்புவது நிறுத்தி வைக்கப்படும்.
அடுத்த 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்,கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக ஒலி,ஒளிபரப்பு செய்வதற்கு சபாநாயகரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவரது வெறுப்பு பேச்சுக்களை ஹன்சார்ட் பதிவிலிருந்தும் நீக்குமாறு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அவரது சில அறிக்கைகள் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு சேதம் விளைவிப்பதாகவும், அவமானகரமானதாகவும் இருப்பதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
அந்த நேரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவ்வப்போது வெளியிட்ட இழிவான மற்றும் அநாகரீகமான அறிக்கைகளும் ஹன்சார்ட் பதிவுகளிலிருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.