ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ள கனேடிய பிரதமர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் நோக்கில் ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார்.
கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மார்க் கார்னி இன்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், பிரித்தானிய பிரதமர் கியா் ஸ்டார்மா், பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
மார்க் கார்னி கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
இவ்விடயம் தொடா்பாக மார்க் கார்னி தெரிவிக்கையில் ,
கனடாவின் இறையாண்மைக்கு ட்ரம்ப் மதிப்பளித்தால் அவரைச் சந்திக்கவும் தயாராக இருக்கின்றேன் எனவும் , இப்போதைய சூழலில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டம் இல்லை ஆனால் ட்ரம்ப் விரைவில் என்னைத் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசுவார் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கனடாவின் பொருளாதாரத்தின் மீது மட்டுமன்றி இறையாண்மை மீதும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தாக்குதல் நடத்தியுள்ளார்.
அவரை எதிர்கொள்ள கனடாவுடன் ஐரோப்பிய நாடுகள் கைகோர்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.