இலங்கையில் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்ட பெண்

சிலாபம் – பங்கதெனிய பகுதியில், பெண் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சிலாபம் பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் பங்கதெனிய கிளைக்கு அருகில், கூட்டுறவு அதிகாரிகள் குழுவொன்றினால், இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் மூன்று பிள்ளை தாய் எனவும் அவர் தற்போது சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான பெண், பங்கதெனியா சந்தியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்திற்குப் பின்னால் ஒரு சமையலறையை கட்டி பல ஆண்டுகளாக சிறு வணிகத்தை நடத்தி வந்துள்ளார்.
அந்தக் கட்டிடம் சமீபத்தில் சிலாபம் பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தால் வாங்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
கூட்டுறவு கட்டிடத்துடன் கூடிய நிலத்தை வாங்கிய போதிலும், அந்த பெண் குறித்த இடத்தை விட்டு நகரவில்லை.
இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடலைத் தொடர்ந்து, சிலாபம் பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் பொது மேலாளர் மற்றும் பிற ஊழியர்கள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று, அந்தப் பெண்ணை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிலாபம் பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சரத் விஜேசிங்கவிடம் கேட்டபோது, அந்தப் பெண் தனது கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை வலுக்கட்டாயமாக கையகப்படுத்த முயற்சித்த போதிலும் எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை என கூறியுள்ளார்.