தொழில்நுட்பத் துறையின் புரட்சி – சீனாவில் 10 லட்சம் மடங்கு அதிவேகம் கொண்ட கணினி அறிமுகம்

சீனாவில் கூகுளின் சூப்பர் கணினியைவிட 10 லட்சம் மடங்கு அதிவேகம் கொண்ட குவாண்டம் கணினியை அறிமுகம் செய்துள்ளது.
சீனா அறிமுகம் செய்துள்ள ஜுச்சோங்ஷி – 3 என்ற குவாண்டம் கணினி, சூப்பர் கணினிகளின் தொழில்நுட்பத் துறையின் புரட்சியாக கருதப்படுகிறது.
சீன அறிவியல் அகாடமியின் கீழ் இயங்கும் சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் குழு, 105 க்யூபிட் மற்றும் 182 கப்ளர் ப்ராஸசரை பயன்படுத்தி ஜுச்சோங்ஷி – 3 என்ற குவாண்டம் கணினியைக் கண்டுபிடுத்துள்ளனர்.
வியக்கத்தக்க வேகத்தில் இயங்கும் ஜுச்சோங்ஷி – 3, தற்போதைய மிகவும் சக்திவாய்ந்த சூப்பர் கணினியைவிட 10 ஆயிரம் டிரில்லியன் வேகத்திலும், கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட குவாண்டம் கணினியைவிட 10 லட்சம் மடங்கு வேகமாக இயங்குகிறது.
2019 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் 53 க்யூபிட் சைகாமோர் ப்ராஸசரை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட குவாண்டம் கணினியானது, அந்த சமயத்தில் உலகில் அதிவேகமாக இயங்கிய சூப்பர் கணினி 10,000 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணியை வெறும் 200 வினாடிகளில் செய்தது.
2023 ஆம் ஆண்டு சீனாவின் யூஎஸ்டிசி ஆராய்ச்சியாளர்கள் 1,400 ஏ100 ஜிபியூ ப்ராஸசரை பயன்படுத்தி, கூகுளின் குவாண்டம் கணினி 200 வினாடிகளில் செய்த பணிகளை வெறும் 14 வினாடிகளில் செய்து முடித்தது. மேலும், விரிவாக்கப்பட்ட மெமரியுடன் கூடிய ஃபிராண்டியர் சூப்பர் கணினிகள் இதே பணியை 1.6 வினாடிகளில் செய்தது.
இதனிடையே, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் சீனாவின் யூஎஸ்டிசி ஆராய்ச்சியாளர்கள் ஜுச்சோங்ஷி 1 மற்றும் 2 ஆகிய குவாண்டம் கணினிகளை கண்டுபிடித்தனர்.
கடந்தாண்டு 67 க்யூபிட் சூப்பர் கண்டெக்டிங் ப்ராஸசரை பயன்படுத்தி உலகின் அதிவேக குவாண்டம் கணினியை கூகுள் நிறுவனம் கண்டுபிடித்திருந்த நிலையில், சீன ஆராய்ச்சியாளர்கள் அந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளனர்.