இலங்கை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரை கைது செய்ய காலை 8 மணி வரை காலக்கெடு விதித்த GMOA

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்யாவிட்டால் வடமத்திய மாகாணம் முழுவதும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் வைத்து நேற்றிரவு பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த நபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரி, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் தனது ஆன்-கால் டியூட்டி அறைக்கு செல்லும் போது தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்கும் விசேட GMOA கூட்டம் ஒன்று கூட்டப்பட்டதாக GMOA பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்தார்.
புதன்கிழமை காலை 8 மணிக்குள் சந்தேகநபரை கைது செய்யாவிட்டால், மாகாணம் முழுவதும் மருத்துவ ஊழியர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை தீவிரப்படுத்துவார்கள் என்று அவர் எச்சரித்தார். தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அவசர சேவைகள் தவிர்ந்த அனைத்து ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“சமீபத்திய வரலாற்றில் ஒரு மருத்துவ நிபுணர் எதிர்கொண்ட மிக மோசமான மற்றும் துக்ககரமான சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்” என்று டாக்டர் விஜேசிங்க கூறினார்.
“அநுராதபுரம் போதனா வைத்தியசாலை இலங்கையின் மிகப்பெரிய வைத்தியசாலைகளில் ஒன்றாகும். குற்றவாளி வெளிநாட்டவர் என்று நம்பப்படுகிறது, மேலும் இந்த சம்பவம் இரவு 7 மணியளவில் நடந்தது, அந்த நேரத்தில் மருத்துவமனை இன்னும் பிஸியாக உள்ளது. இது புறக்கணிக்கக்கூடிய விஷயமல்ல,” என்றார்.