இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கைக்கு மார்ச் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை 37 ஆயிரத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை 37,768 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இவ்வாண்டு இதுவரை நாட்டுக்கு வருகை தந்த மொத்த சுற்றுலா பயணிகளின் வருகை 530,746 ஆகும்.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடுப்பகுதி வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது அதிளவாக அரை இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
மார்ச் மாதத்திற்கான நாளாந்த சுற்றுலா பயணிகளின் சராசரி வருகை 7,553 ஆகும்.
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் பட்டியலில் அதிகளவாக 15.3 சதவீதமானவர்களின் வருகையுடன் ரஷ்யா முதலாம் இடத்தில் உள்ளது.
14.2 சதவீதமானவர்களின் வருகையுடன் இந்தியா இரண்டாம் இடத்திலும், 10.2 சதவீதமானவர்களின் வருகையுடன் பிரித்தானியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
ஜேர்மனி, பிரான்ஸ், சீனா, அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகியவை அடுத்த அடுத்த இடங்களில் உள்ளன.
சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கு புதிய விளம்பரப்படுத்தல்களை இந்த மாத இறுதியில் வெளியிட சுற்றுலா அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலா பயணிகளை ஈர்த்து 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்ட இலக்கு வைத்துள்ளது.