பாலி தீவின் கூரை நீர் தொட்டியில் நிர்வாணகோலத்தில் வெளிநாட்டவர் ஒருவரின் உடல் கண்டெடுப்பு

பாலியில் கூரை மேற்பரப்புத் தண்ணீர்த் தொட்டி ஒன்றில் வெளிநாட்டவர் என்று நம்பப்படும் ஒருவரது உடல் நிர்வாண நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய தேடி மீட்கும் படையின் பாலித்தீவுப் பிரிவினர் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கடந்த மார்ச் 4ஆம் திகதி தென்பாலியில் அமைந்துள்ள பிரபல பாடுங் பகுதியில் வாடகைக்கு விடப்பட்ட ஒரு வீட்டில் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
இறந்தவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதில் தெளிவு இல்லை என்றாலும் அவர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் என்று உள்ளூர் அறிக்கைகள் கூறுகின்றன.
பராமரிப்பு ஊழியர் ஒருவர் உடலைக் கண்டுபிடித்து வீட்டின் உரிமையாளருக்குத் தெரிவித்ததாக ‘த பாலி டைம்ஸ்’ தெரிவித்தது. முதலில், தண்ணீர்த் தொட்டியில் இருப்பது ஒரு பொம்மை என்று நினைத்த அந்த பராமரிப்பு ஊழியர், பின்னர் மீண்டும் நன்கு பார்த்ததில் அது மனித உடல் என்று உறுதிப்படுத்தியதாக தென்பசார் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.
ஆடைகளின்றி இருந்த நபரின் உடல் முழுவதும் காயங்கள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. நபரின் முழங்கால், மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் காயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.இதற்கிடையே, வற்றிய நிலையில் தண்ணீர்த் தொட்டி இருந்தது என்றும் கூறப்பட்டது.
நபரின் உடல் கண்டுபிடிக்கப்படுவதற்கு முதல் நாள் இரவில் கறுப்பு உடையில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை வாடகைக்கு இருந்த சிலர் பார்த்ததாகப் பெயர் குறிப்பிட விரும்பாத பகுதிவாசி ஒருவர் கூறினார்.
விசாரணை நடந்துவருவதால் கூடுதல் விவரங்களை வெளியிட முடியாது என்று வெளியுறவு விவகார, வர்த்தப் பிரிவு தெரிவித்துள்ளது.