ICCயின் பிப்ரவரி மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் ஷுப்மன் கில்!

ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு அம்மாதத்துக்கான சிறந்த வீரர் விருதினை ஐசிசி வழங்கி வருகிறது. அந்த வகையில், பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், இந்திய அணியின் ஷுப்மன் கில் மற்றும் நியூசிலாந்தின் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஸ்டீவ் ஸ்மித்
இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக செயல்பட்டு ரன்கள் குவித்தார். இரண்டு போட்டிகளில் அவர் இரண்டு சதங்கள் விளாசினார். அவர் 141 மற்றும் 131 ரன்கள் எடுத்தார். இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித்துக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் 12 ரன்கள் மற்றும் 29 ரன்கள் குவித்தார். அதன் பின், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடினார். இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஷுப்மன் கில்
கடந்த மாதத்தில் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஷுப்மன் கில் 101.50 சரசாரியுடன் 406 ரன்கள் குவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு 87 ரன்கள், 60 ரன்கள் மற்றும் 112 ரன்கள் முறையே எடுத்தார். இந்த தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. ஷுப்மன் கில் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றிய நேர்மறையான எண்ணத்தோடு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி களமிறங்கியது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். அந்தப் போட்டியில் அவர் 101 ரன்கள் எடுத்தார். அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 46 ரன்கள் எடுத்தார். இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
கிளன் பிலிப்ஸ்
மிகச் சிறந்த ஃபீல்டரான நியூசிலாந்து அணியின் கிளன் பிலிப்ஸ், கடந்த மாதம் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். கடந்த மாதத்தில் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 236 ரன்கள் குவித்துள்ளார்.
கிளன் பிலிப்ஸின் சிறந்த பங்களிப்பினால் நியூசிலாந்து அணி, சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக பாகிஸ்தானில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. முத்தரப்பு தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 106 ரன்கள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 28 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக இறுதிப்போட்டியில் 20 ரன்கள் எடுத்தார்.
முத்தரப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்ட நிலையில், அதனை சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் தொடர்கிறார் பிலிப்ஸ். பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற போட்டியில் 61 ரன்கள் மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக ராவல்பிண்டியில் நடைபெற்ற போட்டியில் 21 ரன்கள் குவித்தார்.
கடந்த மாதத்தில் ஸ்டீவ் ஸ்மித், ஷுப்மன் கில் மற்றும் கிளன் பிலிப்ஸ் மூவருமே சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இவர்களில் ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை வெல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.