பிலிப்பீன்சில் புதிதாகச் சீரமைக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்து விபத்து

பிலிப்பீன்சின் இசபெலா மாநிலத்தில் புதிதாகச் சீரமைக்கப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமை ( 27) இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் குறைந்தது நான்கு வாகனங்கள் சேதமடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாதுகாப்பானது என்று முறையாக அறிவிக்கப்படாத கபாகன்-சாண்டா மரியா பாலம் இடிந்து விழுந்ததில் யாரும் காயமடையவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், அதுகுறித்த தகவல்கள் சேகரிக்கப்படுவதாக ‘ஏசியா நியூஸ் நெட்வொர்க்’ செய்தி நிறுவனம் கூறியது.
பிலிப்பீன்ஸ் பொதுப்பணி,நெடுஞ்சாலைத் துறைகளிடமும் பாலத்தைச் சீரமைத்த ஒப்பந்ததாரரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
பேரிடர்களின் போதும் அருகே உள்ள பழைய பாலம் ஆற்று நீரால் நிரம்பிவழியும் போதும் கபாகன்-சாண்டா மரியா பாலத்தில் மூன்று சக்கர, இலகுரக வாகனங்கள் செல்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
720 மீட்டர் நீளமுள்ள இப்பாலத்தைக் கட்டிமுடிக்க முதலில் 640 மில்லியன் பீசோஸ் (S$15.6 மில்லியன்) நிதியளிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்க வேண்டிய அப்பாலம், அதன் அடித்தளத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாகக் கூடுதலாக 200 மில்லியன் பீசோஸ் செலவில் சீரமைக்கப்பட்டது.அண்மையில், அப்பாலத்தின் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.