பணயக்கைதிகள்-கைதிகள் பரிமாற்றத்திற்குப் பிறகு இரண்டாம் கட்ட போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த ஹமாஸ்

காசாவில் இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பினர் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) தெரிவித்தனர்.
இஸ்ரேலியப் பிணைக்கைதிகள் நால்வரின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்ததற்காக சிறைகளிலிருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை இரவோடு இரவாக இஸ்ரேல் விடுவித்தது.அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.ஜனவரி 19ஆம் திகதி அமலுக்கு வந்த ஆறு வாரக்கால முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் இவ்வாரயிறுதியில் முடிவுக்கு வருகிறது.
இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்ட நான்கு பிணைக்கைதிகளின் உடல்களில் மூவர், ஹமாஸ் சிறைப்பிடித்த பிறகு கொல்லப்பட்டதாகவும் ஒருவர் மட்டும் 2023 அக்டோபர் மாதம் இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் பிப்ரவரி 27ஆம் திகதி தெரிவித்தது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு ஹமாசிடமிருந்து உடனடியாக எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. இருப்பினும், பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் கொன்றதாக இஸ்ரேல் இதற்குமுன் சுமத்திய குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்தனர். இஸ்ரேலின் குண்டுவீச்சில் அவர்கள் பலியானதாகவும் அவர்கள் கூறினர்.
இரண்டாம் கட்ட போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை.
ஹமாசின் அழைப்புக்கு இஸ்ரேல் உடன்பட்டால் காஸா போரை நிரந்தரமாக நிறுத்த இந்தப் பேச்சுவார்த்தை வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.மீதமுள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காகப் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க இஸ்ரேல் அரசாங்கத்திற்கு பொதுமக்கள் அழுத்தம் கொடுக்கின்றனர்.அதே நேரத்தில், சிலர் ஹமாசை அழிக்கும் இஸ்ரேலின் நோக்கத்தை நிறைவேற்ற மீண்டும் போரில் ஈடுபட வேண்டும் எனக் கூறுகின்றனர்.
இந்நிலையில், பிணைக் கைதிகளை விடுதலை செய்ய இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே வழி போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி நடப்பது மட்டுமே என ஹமாஸ் அமைப்பு பிப்ரவரி 27ஆம் திகதி தெரிவித்தது.மேலும், காஸாவில் இரண்டாம் கட்டப் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம் என அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியது.காசாவில் இன்னும் 59 பிணைக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் நம்புகின்றனர்.
காசா- எகிப்து எல்லையில் இருக்கும் இஸ்ரேலியப் படையை அங்கேயே இருக்கும்படி அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக இஸ்ரேலிய எரிசக்தி அமைச்சர் அந்நாட்டு ஊடகத்திடம் கூறினார்.
மார்ச் 1ஆம் திகதி முடிவடையும் முதல் கட்ட போர் நிறுத்தத்திற்குப் பிறகு காசா- எகிப்து எல்லைப் பகுதியிலிருந்து இஸ்ரேலியப் படைகளை அந்நாடு திரும்பபெற வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர்களை அங்கேயே இருக்கும்படி இஸ்ரேல் உத்தரவிட்டிருப்பது இரண்டாம் கட்டப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் ஆர்வமாக இருப்பதைக் காட்டுகிறது.மேலும், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்தின் முழு ஆதரவையும் இஸ்ரேல் பெற்றுள்ளதால், போர் நிறுத்தத்திற்கு முந்தைய காலத்தை விட இப்போது பேச்சுவார்த்தை நடத்த அந்நாடு வலுவான நிலையில் உள்ளதாகவும் அந்நாட்டு அமைச்சர் கூறினார்.