இலங்கை: நாமல் மீது அரசியல் பழிவாங்கல் இல்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

அரசியல்வாதிகளை கேள்விக்குட்படுத்துவதில் எவ்வித அரசியல் பழிவாங்கலும் இல்லை என கூறியுள்ள பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, எதிர்காலத்தில் மேலும் பல அரசியல்வாதிகளை சட்ட அமலாக்க அதிகாரிகள் தினமும் அழைத்து விசாரணை நடத்துவார்கள் என தெரிவித்துள்ளார்.
அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும், விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“மக்கள் விசாரணையின் ஒரு பகுதியாக அழைக்கப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் CID விசாரணை நடத்தப்பட்டதன் பின்னணியில் அரசியல் அவமதிப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல்வாதிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னணியில் அரசியல் பழிவாங்கல் எதுவும் இல்லை எனவும், சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் வாக்குமூலங்களை பதிவு செய்ய விரும்பினால் நாமலோ அல்லது வேறு எவரேனும் அழைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.