உலகின் பல நகரங்களில் தாங்க முடியாத எலித் தொல்லை – அதிகரிக்கும் முறைப்பாடுகள்

உலகின் பல நகரங்களில் தாங்க முடியாத எலித் தொல்லையால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
முதன்முறையாக 16 நகரங்களில் எலிக் கூட்டங்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
அவற்றுள் 11 நகரங்களில் எலிகளின் சேட்டைகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன. பிரசல்ஸ், ஆம்ஸ்டர்டாம் போன்ற நகரங்களில் சுதந்திரமாக எலிகள் ச் சுற்றித் திரிவதாக தெரியவந்துள்ளது.
ஆம்ஸ்டர்டாமில் கணக்கு வழக்கில்லாமல் எலிகள் பெருகிவிட்டதாக தெரியவந்துள்ளது. தெருவோர உணவுக் கடைகளின் மிச்சம் மீதி, உள்ளூர், வெளியூர் மக்கள் விட்டுச் செல்லும் உணவுக் கழிவுகள், குப்பைகள் முதலியன எலிகளுக்கு விருந்தாகின்றன.
நீண்டகாலம் வெப்பம் நீடிப்பதால் எலிகள் மாதந்தோறும் இனப்பெருக்கம் செய்கின்றன. ஒவ்வொரு முறையும் எட்டிலிருந்து 16 எலிகள் பிறக்கின்றன. எலிகள் பெருக அதுவும் ஒரு காரணமாகும்.
ஓர் எலி 28 சென்ட்டிமீட்டர் வரை வளரும், அரை கிலோ வரை எடையிருக்கும். 20இலிருந்து 100 எலிகள் வரை கூட்டமாக வசிக்கும். வளைகளை விட்டு அவை வெகு தூரம் செல்வதில்லை. 100 மீட்டர் சுற்றளவில் எலிகள் இரை தேடிக்கொள்ளும்.
நகரமயமாதல், மிதமிஞ்சிய வெப்பம், மனிதர்களின் நடவடிக்கைகள் முதலியன எலிகளின் பெருக்கத்துக்குக் காரணம் என்கிறது புதிய ஆய்வில் குறிப்பிடப்படுகின்றது.