அமெரிக்காவில் தொடரும் நெருக்கடி – 1,600 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்: டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் 1,600 ஊழியர்கள பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி கடந்த மாதம் பதவியேற்ற டிரம்ப், பல்வேறு முக்கிய திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். அதில், முக்கியத்துவம் வாய்ந்தது அரசுத் துறைகளில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கை ஆகும்.
ஏற்கெனவே லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு 8 மாத ஊதியத்துடன் கட்டாய இராஜிநாமா செய்துகொள்ள டிரம்ப் நிர்வாகம் வாய்ப்பு அளித்திருந்தது.
கடந்த மாதம் வெளியிட்டிருந்த உத்தரவில், பிப்ரவரி 6ஆம் திகதிக்குள் பணியில் இருந்து இராஜிநாமா செய்துகொண்டால் 8 மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் 1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக ஞாயிற்றுக்கிழமை டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், பல்வேறு நாடுகளில் பணிபுரியும் 4,500-க்கும் மேற்பட்ட சர்வதேச மேம்பாட்டு நிறுவன ஊழியர்களை ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பில் அனுப்பி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் நிர்வாகிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்காக சில ஊழியர்களை தவிர்த்து அனைவரையும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அனுப்பிய மின்னஞ்சலில், ”நீங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை தெரிவிப்பதில் வருத்தப்படுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.