கனேமுல்ல சஞ்சீவவின் கொலையின் பின்னணி

கனேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்துக்குள் சினிமா பாணியில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான பல தகவல்களை நிறைய இடங்களில் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் இந்த கனேமுல்ல சஞ்சீவ கொழும்பின் பாதாள உலக கோட் பாதராக தன்னை நிலைநாட்டிக்கொள்ள முயற்சித்தவர். 30 க்கும் அதிகமான கொலை சம்பவங்களில் கூலி கொலைகாரராக இவர் செயற்பட்டதாக தகவல்கள் இருக்கின்றன.
திட்டமிட்ட ஒரு கும்பலோடு சேர்ந்து தனியார் வங்கியொன்றில் 7 கோடி ரூபா கொள்ளையிட்ட சம்பவத்தில் கைதானவர்.
சிறைக்கு சென்ற சஞ்சீவ அப்போதைய கொழும்பின் பாதாள கோட் பாதர்களான “புளூமெண்டல் சங்க, ஆர்மி சம்பத்” ஆகியோரது அடியாளாக வெளியில் வருகின்றார். அதன் பின்னர் கட்டம் கட்டமாக கொழும்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சஞ்சீவ முயற்சிகளை செய்தாலும் அதற்கு தடையாக தெமட்டகொட சமிந்த (இவரும் பாதாள உலக உறுப்பினர்) தடையாக இருக்கிறார்.
எனவே சமிந்தவை கொலை செய்ய சஞ்சீவ முயற்சி செய்தார். முதல் சம்பவமாக தெமட்டகொட இறைச்சிக்கடைக்கு முன்னாள் வாகனத்தில் வந்து துப்பாக்கி சூடு நடத்தினார்.
ஆனால் சமிந்தவின் தம்பி ருவன் சஞ்சீவவுக்கு முன்னர் வந்தார் எதிரில் இருந்து சஞ்சீவ வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதனால் இவர்களின் அடியாள் ஒருவர் உயிரிழந்தாலும் தெமட்டகொட சமிந்த உயிர் தப்பினார். இந்த சம்பவத்தின் பின்னர் சஞ்சீவ உட்பட்ட குழு போலி கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொண்டு துபாய் சென்றனர்.
ஆனால் குறுகிய நாட்களுக்கு பின்னர் மீண்டும் சஞ்சீவ இலங்கை வந்தார். மீண்டும் சமிந்தவை கொலை செய்ய முயன்றார். பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் சமிந்த ஆஜராகி மீண்டும் சிறைக்குச் சென்று கொண்டிருந்த பஸ் வண்டியை தெமட்டகொட பகுதியில் பாதை நடுவில் இடைமறித்து பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர் இந்த சஞ்சீவ உட்பட அவரது குழு.
அங்கேயும் சமிந்த உயிர்தப்பிய நிலையில் குற்றவாளிகளை தேடி பொலிஸார் வலைவீச ஆரம்பித்தனர்.
குறுகிய காலத்துக்குள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதில் இந்த சஞ்சீவவும் இருந்தார். மீண்டும் சிறைக்குச் சென்ற சஞ்சீவ கொழும்பை கைவிட்டுவிட்டு கம்பஹா மாவட்ட பாதாள செயற்பாடுகளை தனக்குக் கீழ் கொண்டுவர முயற்சி செய்தார்.
அங்கே அவருக்கு தடையாக இருந்தவர்தான் ஒஸ்மான் என்பவர். 2018 ஏப்ரல் மாதம் ஒஸ்மான் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினார் சஞ்சீவ. அதற்காக தனது அடியாட்களான “அஜா மற்றும் சூளா” என்பவரையே பாவித்தார்.
இதுவே சஞ்சீவவின் சாதாரணமான பின்னணி. இவருடைய திட்டங்களின் அடிப்படையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கிலிட முடியாதவை.
30 க்கும் அதிகம் என்று ஒரு புறம் சொல்லப்படுகிறது. குற்றவாளிக்கூண்டுக்கு மிக அருகில் சென்றுதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி தாரி அருகில் சென்றாலும் ஒருவேளை சஞ்சீவவின் சட்டத்தரணியாக இருக்கலாம் என்றே அநேகர் நம்பியுள்ளனர்.
எவ்வாறாயினும் கத்தியெடுத்தவனுக்கு கத்தியால் சாவு என்பார்கள். இங்கே அது நிறைவேறியுள்ளது. அதுதான் யதார்த்தம்.
துப்பாக்கிச் சூட்டுக்காக பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி நீதிமன்ற வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்திலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் (19) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கனேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பில் அவர் அழைத்துவரப்பட்டிருந்தார். பின்னர் அவர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்குள்ள நீதி மன்ற பிரதிவாதி கூண்டில் வைத்து அவர் சுடப்பட்டதுடன், சட்டத்தரணி போல் வேடமணிந்த ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த கனேமுல்ல சஞ்சீவ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்வதற்காக புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணி மற்றும் பெண் சட்டத்தரணி போன்று வேடமணிந்த இரண்டு பேர் நீதிமன்றத்திற்குள் பிரவேசித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.
சட்டத்தரணி போல் வேடமணிந்த நபர் நீதிமன்றத்திற்குள் வெறுங்கையுடன் நுழைந்து, பின்னர் குறித்த பெண்ணிடமிருந்து துப்பாக்கியைப் பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு உட்பட 5 விசேட குழுக்களின் கீழ் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கனேமுல்ல சஞ்சீவ’ என்ற சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், சட்டத்தரணி வேடத்தில் வந்து கொலை செய்த நபர் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், இன்று (19) காலை பூஸா சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவின் பாதுகாப்பிற்காக சிறைச்சாலை அதிகாரிகளுடன், 12 விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், புத்தளம் – பாலாவி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் ஆரம்பத்தில் தெரிவித்துள்ளனர்.
வேன் ஒன்றில் தப்பிச் செல்லும் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபர் இராணுவ கமாண்டோ சிப்பாயோ அல்லது புலனாய்வு அதிகாரியோ அல்ல என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கனேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபர் அடிப்படை பயிற்சியை முடித்துவிட்டு இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இராணுவப் பயிற்சியின் போது தப்பிச் சென்ற குறித்த சிப்பாய், பின்னர் பொது மன்னிப்புக் காலத்தின் கீழ் சட்டப்பூர்வமாக இராணுவத்திலிருந்து இராஜினாமா செய்துள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அன்றிலிருந்து அவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் சுமார் 6 கொலைகளில் தொடர்புடையவர், மேலும் தெஹிவளை, வட்டரப்பலவில் நடந்த இரட்டைக் கொலையிலும் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அவர் தொடர்பாக சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, புத்தளம் பாலாவி பகுதியில் கைது செய்யப்பட்ட இந்த நபர் பல பெயர்களில் தோன்றியவர் என்று தெரிவித்தார்.
அவரிடம் பல அடையாள அட்டைகள் இருப்பதாகவும், அதில் ஒன்றில் சட்டத்தரணியாக பணிபுரிவதைக் குறிக்க தயாரிக்கப்பட்ட சட்டத்தரணி அடையாள அட்டையும் அடங்குவதாகவும் அவர் கூறினார்.
அவர் முதலில் மொஹமட் அஸ்மன் ஷெரிப்தீன் என்ற பெயரில் தோன்றியதாகும், பின்னர் சமிந்து தில்ஷான் பியுமாங்க கந்தனராச்சி என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கொடிகாரகே கசுன் பிரபாத் நிஸ்ஸங்க என்ற பெயரைக் கொண்ட போலியான சட்டத்தரணி அடையாள அட்டையையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அதன்படி, எதிர்கால விசாரணைகளில், இந்த சந்தேக நபர் மற்றும் கனேமுல்ல சஞ்சீவவின் கொலையில் அவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த அனைவரையும் பற்றிய உண்மையான தகவல்களை வெளிக்கொணர முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டின் பின்னர் துப்பாக்கிதாரியும், அவருக்கு உதவிய பெண்ணும் நீதிமன்றில் இருந்து தப்பிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.
பாதாள உலக குழுவை சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கி சூடு மற்றும் கொலை, வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கொலையை, தற்போது வெளிநாட்டில் வசிக்கும் குற்ற கும்பலை சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே, பட்டுவத்தே சாமர மற்றும் ஜூட் பிரியந்த ஆகியோர் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், பூசா சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவை பாதுகாக்க 12 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறப்பு படை அதிகாரிகள் கடமையில் இருந்துள்ளனர்.
தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், பாதுகாப்பு குறைபாடு காரணமாக நீதிமன்ற வளாகத்திற்குள் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு நடந்ததா என ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கவிடம் பல தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீதிமன்றத்திற்குள் நுழையும் அனைத்து நபர்களும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் ஆனால் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் கூறப்பட்டது.
இதேவேளை குறித்த கொலையை மேற்கொள்ள ஒரு கோடி 50 இலட்சம் ரூபாய் ஒப்பந்தம் பேசப்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
1997 ஆம் ஆண்டு மஹரகம தம்பஹேனபரவில் பிறந்த இவர் அடையாள அட்டையில் சமிந்து தில்ஷான் பியுமங்க கதனாரச்சி என குறிப்பிடப்பட்டிருந்தாலும், 2014 ஆம் ஆண்டு ஷெரிப்டீன் எம்.எஸ் என்ற மற்றொரு பெயருடன் இராணுவத்தில் இணைந்த அடையாள அட்டையும் காணப்படுகின்றது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் சேவையில் இணைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு
பதிவு இலக்கம் : S/580561
தரவரிசை: ஜெனரல் சிப்பாய்
பெயர்: ஷெரிஃப்டீன் எம்.எஸ்
வயது: 28
அலகு : 1
இணைந்த திகதி :10.10.2014
பின்னர் அவர் கமாண்டோ படைப்பிரிவில் சேர்ந்தார், ஆனால் படைப்பிரிவை விட்டு வெளியேறினார். சஞ்சீவாவை இவ்வுலகிற்கு அனுப்பியவர் நீண்டகாலமாக அடையாள அட்டை தயாரித்து இராணுவப் பயிற்சி பெற்று வந்தவர் அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹரகம, தம்பஹேன வீதியைச் சேர்ந்த சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தனாரச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
சுட்டுக்கொல்லப்பட்ட பாதாள குழு தலைவர் கனேமுல்ல சஞ்சீவவின் சடலத்தை பொறுப்பேற்க அவர்களின் உறவினர்கள் எவரும் முன்வரவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின்ன் உதவியை கோரியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றிய தகவல் தெரிந்தால் கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். பணிப்பாளர், கொழும்பு குற்றவியல் பிரிவு 071-8591727 பொறுப்பதிகாரி, கொழும்பு குற்றவியல் பிரிவு – 071-8591735
பெயர் – சிங்புர தேவகே
இஷாரா செவ்வந்தி
வயது – 25 வயது
தே.அ.அ.இல- 995892480V முகவரி – 243/01, நீர்கொழுப்பு
வீதி, ஜய மாவத்தை,
கடுவெல்லேகம
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் பெயராக மொஹமட் அசாம் ஷெரிப்தீன் என்று பெயரை அறிவித்ததன் ஊடாக தங்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகக் கூறி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஒரு சீராக்கல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை மொஹமட் அசாம் ஷெரிப்தீனின் சகோதரர் தாக்கல் செய்துள்ளார்.
இந்த சீராக்கல் மனு தொடர்பாக நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்த சட்டத்தரணி தசுன் பெரேரா, கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொஹமட் அசாம் ஷெரிப்தீன் அல்ல என்று குறிப்பிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் மொஹமட் அசாம் ஷெரிப்தீனும் ஒருவர் அல்ல, வெவ்வேறு நபர்கள் என்றும் அவர் கூறினார்.
இதனால் மொஹமட் அசாம் ஷெரிப்தீனின் குடும்பத்தினர் ஏராளமான சட்ட மற்றும் சமூகப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிட்டுள்ளதாகக் கூறி, இது தொடர்பாக தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாத நிலையில், அவரை ஆஜர்ப்படுத்தியதன் பின்னர் கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு சட்டத்தரணிக்கு அறிவித்தார்
இந்த கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவரும் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள குற்றவியல் பிரிவில் நீதிமன்றப் பணிகள் பிரிவில் கடமையாற்றிவந்த சந்தேகநபர், பாதெனிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கனேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி வீரசிங்கவுடன் அவர் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
முதற்கட்ட வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், கைது செய்யப்பட்ட அதிகாரி மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்
அஸீம் கிலாப்தீன்