இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? அமைச்சர் ஆனந்த விஜேபால விளக்கம்

இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
“நேற்று நீதிமன்ற வளாகத்தினுள் இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்தும் கடந்த காலங்களில் இவ்வாறான ஒருங்கமைக்கப்பட்ட குழுக்களால் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்றைய தின சம்பவத்தினை அரசு கடும் அவதானத்தினை செலுத்தியுள்ளது. இது குறித்த தேவையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில மணி நேரங்களில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இவர் மகரகம பகுதியினை வசிப்பிடமாகக் கொண்ட சமிந்து டில்ஷான் மதுஷங்க கந்தனல் ஆராச்சி என்பவர் பாலவி பிரதேசத்தில் வைத்து மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொரு சந்தேக நபராக பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, இது பொதுவாக குறிப்பிட்ட குழுக்களுக்கு இடையில் இடம்பெறும் சண்டைகள் மோதல்களே..” என அவர் குறிப்பிட்டுள்ளார்.