பிலிப்பீன்ஸ் துணை அதிபருக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

பிலிப்பீன்ஸ் துணை அதிபர் சாரா டுட்டர்டே மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை எதிர்த்து அவரை ஆதரிக்கும் வழக்கறிஞர்கள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 18ஆம் திகதி மனுதாக்கல் செய்தனர்.முறையான விசாரணையின்றி அவர்மீது இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளாதாகவும் டுட்டர்டேவை ஆதரிக்கும் வழக்கறிஞர்கள் கூறினர்.
பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியருடன் ஒரு காலத்தில் நல்லுறவில் இருந்த டுட்டர்டேமீது அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக அந்நாட்டு நாடாளுமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.அரசியலமைப்பு விதிகளை மீறியது, நம்பிக்கை துரோகம், ஊழல் எனப் பிற குற்றச்சாட்டுகளும் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளது.
துணை அதிபரின் பதவி நீக்கத் தீர்மானத்தைத் தள்ளிவைக்கவும் அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள்மீது நாடாளுமன்றம் நடத்தும் விசாரணையைத் தடுக்கவும் பிப்ரவரி 18ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட மனு முயல்வதாகக் கூறப்பட்டது.
முறையாகவும் சரியான வகையிலும் விசாரணை நடத்தப்படாமல் துணை அதிபர்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக அவருக்கு ஆதரவாக மனு தாக்கல் செய்திருக்கும் 29 வழக்கறிஞர்களில் ஒருவரான இஸ்ரேயிலிட்டோ டோரியொன் கூறினார்.
மேலும், டுட்டர்டேவுக்கு அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க எந்தவொரு அழைப்பாணையும் அனுப்பப்படவில்லை என்றும் உரிய நடைமுறைகள் எதையும் நாடாளுமன்றம் பின்பற்றவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.டுட்டர்டேவுக்கு ஆதரவாகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் மேலும் சொன்னார்.
அரசியலமைப்பு ரீதியில் செல்லாத அரசியல் குற்றச்சாட்டைத் தடுக்க மக்கள் தரப்பில் இது ஒரு நியாயமான முயற்சி என்றார் அவர்.
மே 12ஆம் திகதியன்று பிலிப்பீன்சில் இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஆரம்பகட்ட பிரச்சாரத்தில் மார்கோஸ் மற்றும் டுட்டர்டே வம்சங்களுக்கு இடையிலான மோதல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த மனுத் தாக்கலை நேரத்தை விரயமாக்குவதற்கான முயற்சி என அரசியல் வல்லுநர் ரிச்சர்ட் ஹெய்டாரியன் கூறினார்.நாடாளுமன்ற விசாரணையை எதிர்கொள்ள அவர்கள் தயங்குவதாகவும் குற்றம் இழைக்கவில்லை என்பதை நிரூபிக்க முடியும் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதையும் இந்த மனுத் தாக்கல் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.