வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை இலங்கை அழைத்துவர விசேட வேலைத்திட்டம்!

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றங்களுடன் தொடர்புடையவர்களை இலங்கைக்கு அழைத்துவருவதற்கான வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க, இந்தியாவில் தலைமறைவாகியுள்ள, குற்றவாளிகளை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேநேரம், இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியினுள் 13 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அதில் 7 சம்பவங்கள் திட்டமிடப்பட்ட குற்றக்குழுவுடன் தொடர்புடையவை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களில் 9 பேர் பலியானதுடன் 2 பேர் காயமடைந்தனர். குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய 30 பேர் இதுவரையில் கைதாகியுள்ளனர்.
கடந்த ஜனவரி 12 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் குற்றங்கள், போதைப்பொருள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் கீழ், நேற்று வரையிலான காலப்பகுதியில் இவர்கள் கைதாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றங்களுடன் நேரடி தொடர்புடைய 922 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 14,000 பேரும் குறித்த காலப்பகுதியில் கைதானதுடன் 197 சட்டவிரோத துப்பாக்கிகளும் மீட்கப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த நடவடிக்கையின் கீழ், நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு மாத காலப்பகுதியினுள் போதைப்பொருட்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சுமார் 16,000 பேர் கைதாகியுள்ளனர்.
அவர்களிடமிருந்து 14 கிலோகிராம் ஹெரோயின் 1,123 கிலோகிராம் கஞ்சா உள்ளிட்ட பல போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
அதேநேரம், இந்த காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 11,054 சாரதிகள் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குற்றங்கள், போதைப்பொருள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கை நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.