இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீதான அமெரிக்க வரிகள் ஏப்ரல் 2ம் திகதிக்குள் அமலுக்கு வரும் ; டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மோட்டார் வாகனங்களுக்கு ஏப்ரல் 2 புதிய வரிவிதிப்பை அறிவிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) எரிசக்திக் கொள்கை குறித்த நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டபோது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். ஏற்கெனவே வர்த்தகப் போர் விரிவடைந்துவரும் வேளையில், டிரம்ப் அடுத்தடுத்து வரிவிதிப்புகளை அறிவிப்பது, நிலைமையை இன்னும் மோசமடையச் செய்யும் என அஞ்சப்படுகிறது.
ஜப்பான், ஜெர்மனி, தென்கொரியாவில் இயங்கும் பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்த அறிவிப்பு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 2024ல் அமெரிக்காவின் மோட்டார் வாகனச் சந்தையில், இறக்குமதிகள் ஏறத்தாழ பாதியளவு பங்கு வகித்தன.
மோட்டார் வாகனங்கள் மீதான வரிவிதிப்பு விகிதம் குறித்த மேல்விவரங்களை டிரம்ப் வெளியிடவில்லை. அமெரிக்கா, கனடா, மெக்சிகோவுக்கு இடையே தடையற்ற வர்த்தக உடன்பாட்டின்கீழ் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு இப்புதிய வரிவிதிப்பு ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும் தெளிவாகத் தெரியவில்லை.
அமெரிக்காவின் பெரிய வர்த்தகப் பங்காளித்துவ நாடுகளான கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்கெனவே டிரம்ப் 25 சதவீதம் வரிவிதிப்பை அறிவித்து, பின்னர் மார்ச் வரை அதை நிறுத்தி வைத்துள்ளார்.
எஃகு, அலுமினிய இறக்குமதிகளுக்கு 25 சதவீதம் வரிவிதிக்கும் திட்டங்களை டிரம்ப் கடந்த வாரம் அறிவித்திருந்தார். நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்ற வலியுறுத்துவதில் வரிவிதிப்பை ஒரு கருவியாக டிரம்ப் பயன்படுத்தி வருகிறார்.