ஆட்குறைப்பு நடவடிக்கையில் ட்ரம்ப் நிர்வாகம் ; ஆயிரக்கணக்கான தகுதிகாண் ஊழியர்கள் நீக்கம்

டிரம்ப் நிர்வாகம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.
மத்திய அரசின் மொத்த ஊழியரணியின் அளவை வேகமாகக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் வியாழக்கிழமை (பிப்ரவரி 13) தொடங்கியதாக அதுபற்றி அறிந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினர்.நாட்டிலேயே ஆக அதிகமான ஊழியரணியைக் கொண்டிருப்பது மத்திய அரசுத் துறைகள்தான்.
முதற்கட்டமாக, அண்மையில் வேலையில் நியமிக்கப்பட்டு பயிற்சிக் காலத்தில் இருப்போரை நீக்க சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.கிட்டத்தட்ட எல்லா பயிற்சி ஊழியர்களையும் நீக்குவதற்கான உத்தரவு அது. அந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் பல்லாயிரம் ஊழியர்கள் வேலைகளை இழக்கும் அபாயம் எழுந்துள்ளது.அத்துடன், இனிவரும் நாள்களில் பேரளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும் என சில அரசாங்க அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, முன்னாள் படைவீரர்கள் விவகாரத் துறை, பயிற்சிக் காலத்தில் இருக்கும் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை அந்தத் துறை வழங்கி வருகிறது.அடுத்தபடியாக, வனச் சேவைத் துறை 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைத் நீக்கத் தயாராகி வருகிறது.
அரசாங்க வேலைகளில் அண்மையில் வேலைக்குச் சேர்ந்த பெரும்பாலான ஊழியர்களுக்கு ஆட்குறைப்புத் தகவல் அடங்கிய மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு விட்டன.
கல்வித் துறை, சிறு வர்த்தக நிர்வாகம், பயனீட்டாளர் நிதிப் பாதுகாப்புப் பிரிவு, மத்திய அரசின் கட்டடங்களைப் பராமரிக்கும் பொதுச் சேவை நிர்வாகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஊழியர்களுக்கு ஆட்குறைப்பு அறிவிப்பு வழங்கப்பட்டு உள்ளது.இவை தவிர, ஆட்குறைப்புக்குத் தயாராகுமாறு உள்நாட்டு வருவாய்ச் சேவை, அமெரிக்கத் தூதரக அலுவலகங்கள் ஆகியவற்றிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசாங்கத் துறைகளில் மேற்கொள்ளப்பட இருக்கும் ஆட்குறைப்பு நடவடிக்கை மிகவும் விரிவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வீணாகவும் மோசடிகளிலும் ஏராளமான பணமிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய திரு டிரம்ப் அதன் காரணமாக மத்திய அரசாங்கத்திற்குப் பெரும் சுமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து இருந்தார்.
அமெரிக்காவின் மத்திய அரசாங்கம் US$36 டிரில்லியன் (S$48.4 டிரில்லியன்) கடனில் சிக்கியுள்ளது. கடந்த ஆண்டுக்கான அதன் நிதிப் பற்றாக்குறை $1.8 டிரில்லியனுக்கு அதிகரித்தது. அதனால், அதனைச் சீர்செய்ய வேண்டிய அவசியம் அமெரிக்க நிர்வாகத்திற்கு ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்க அரசாங்கத் தகவலின்படி, ஏறக்குறைய 280,000 அரசாங்க ஊழியர்கள் ஈராண்டுகளுக்கும் குறைவான காலத்தில் பணியில் சேர்ந்தனர். அவர்களில் பலர் இன்னும் பயிற்சிக்காலத்தில் உள்ளனர்.