ஐபிஎல்லில் விளையாடுவாரா சஞ்சு சாம்சன்? விரலில் அறுவை சிகிச்சை.!
சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட புகைப்படத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பகிர்ந்துள்ளது.
இப்போது மருத்துவர்கள் குழுவுடன் சாம்சனின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்திக்கும் நிலையில், ஐபிஎலில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.
ஐபிஎல் தொடங்க இன்னும் 38 நாள்களே மீதமுள்ள நிலையில், இந்த குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் குணமடைந்தால் தான் அவரால் இதில் பங்கேற்க முடியும். முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரின் 3வது பந்து சஞ்சு சாம்சன் கை விரலில் கடுமையாக தாக்கியது. இதனால், அவர் வலியால் துடித்த நிலையில் உடனே முதலுதவி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் 6 வாரங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி நிம்மதிப் பெருமூச்சு விடும் அளவுக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. RR கேப்டன் சஞ்சு சாம்சன், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 சீசனுக்கு முன்பே குணமடைவார் என்று கூறப்படுகிறது.
அதாவது, 18-வது சீசனுக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் தொடக்கப் போட்டி மார்ச் 21 அன்று நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், சஞ்சு சாம்சன் குணமடைய ஒரு மாதத்திற்கு மேல் ஆகாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி தொடங்க இன்னும் ஒரு மாதத்திற்கும் மேலாக உள்ளது. எனவே, குணமடைந்த பிறகு அவரது உடற்தகுதியைப் பொறுத்து சஞ்சு ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்படுவதைக் காணலாம். காயம் காரணமாக, ஜம்மு-காஷ்மீருக்கு எதிரான ரஞ்சி டிராபியில் கேரளாவின் காலிறுதிப் போட்டியில் சாம்சன் விளையாட முடியவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஆர்.ஆர். அணிக்கு, அவர் அவர்களுக்கு முழுமையாகத் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.