இலங்கையில் பிணையில் விடுதலையான நபர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு!
இலங்கையில் வாதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பிணையில் விடுதலையாகி சென்றப்பின் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாணந்துறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு குழந்தையின் தந்தையான சமிதா தில்ஷான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் வாதுவ பொலிஸாரால் கார் விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டு, பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் இருந்தபோது இரவில் இரத்த வாந்தி எடுத்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, பாணந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பாணந்துறை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.