மின்னஞ்சல் வழியாக ஏர் இந்தியாவிற்கு வெடிகுண்டு மிரட்டல்
ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு கெம்பகௌடா அனைத்துலக விமான நிலையத்தில் அமைந்துள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) அம்மிரட்டல் மின்னஞ்சல் வந்ததாகக் காவல்துறை துணை ஆணையர் சஜித் குமார் தெரிவித்தார்.
அதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, கடந்த ஜனவரி 30ஆம் திகதி ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி அனைத்துலக விமான நிலையத்திற்குத் தொலைபேசிவழி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வெடிகுண்டுப் படையினரின் துணையுடன் விமான நிலைய அதிகாரிகள் முழுமையான சோதனை மேற்கொண்டனர்.
காமரெட்டி மாவட்டத்திலிருந்து அந்த மிரட்டல் அழைப்பு விடுக்கப்பட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நித்தின் என்ற ஆடவரே அம்மிரட்டலை விடுத்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர் தொலைபேசி மூலம் விமான நிலையத்திற்குக் கிட்டத்தட்ட நூறு முறை அழைப்பு விடுத்ததாகச் சொல்லப்பட்டது.
நித்தின் மனநலம் சரியில்லாதவர் என்று அவருடைய பெற்றோர் சொன்னதாகக் காவல்துறை தெரிவித்தது.