கரையை கடக்கும் மோக்கா புயல் : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
தென்கிழக்கு மற்றும் அதைஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் உருவான ‘மோக்கா’ புயல் நேற்று முன்தினம் இரவு அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்தது.
மோக்கா புயல் இன்று தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் மற்றும் மியான்மரில் உள்ள தியாக்பியூ இடையே புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையை கடக்கும் போது 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து வங்காள தேசம் மியான்மரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புயல் கரையை கடக்கும் காக்ஸ் பஜார் பகுதியில் ரோங்கியா அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 10 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதே போல் மியான்மரின் மேற்கு ரக்கைன் கடற்கரையில் உள்ள சிட்வேயில் உள்ள முகாம்களிலும் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயலையடுத்து காக்ஸ் பஜார் பகுதியில் 1.90 லட்சம் பேரையும்> சிட்டகாங்கில் 1 லட்சம் பேரையும் பாதுகாப்பான இடங்களுக்கு வங்காளதேச அதிகாரிகள் இடம் மாற்றி உள்ளனர்.