இறக்குமதி செய்யப்படும் அனைத்து எஃகு மற்றும் அலுமினியத்திற்கு 25% வரி; ட்ரம்ப் அதிரடி
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/tariffs-on-steel-aluminum-1280x700.jpg)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தகக் கொள்கையில் மற்றொரு திடீர் திருப்பமாக, அமெரிக்காவுக்கு எஃகு, அலுமினிய இறக்குமதிகள் அனைத்துக்கும் புதிதாக 25 சதவீத வரிவிதிப்பை அறிவிக்கப் போவதாக ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) தெரிவித்துள்ளார். உலோக இறக்குமதிகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்படும் தீர்வைக்கு மேலாக இப்புதிய வரிவிதிப்பு இடம்பெறும்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், உலோகங்களுக்குப் புதிய வரிவிதிப்பை திங்கட்கிழமை (பிப்ரவரி 10) அறிவிக்கவுள்ளதாகக் கூறினார்.
அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு மற்ற நாடுகளின் வரிவிதிப்புக்குப் பதிலடியாக அமெரிக்காவும் அந்தந்த நாடுகளின் ஏற்றுமதிகளுக்கு வரிவிதிப்பை செவ்வாய் அல்லது புதன்கிழமை தாம் அறிவிக்கவுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். அந்த வரிவிதிப்பு உடனடியாக நடப்புக்கு வரும் என்றார் அவர்.
பதிலுக்குப் பதில் வரிவிதிக்கும் திட்டம் குறித்து கருத்துரைத்த அவர், “மிகவும் எளிது. அவை எங்களுக்கு வரிவிதித்தால், நாங்களும் அவற்றுக்கு வரிவிதிப்போம்,” என்றார்.
அமெரிக்காவுக்கு அதிகம் எஃகு ஏற்றுமதி செய்யும் நாடுகள் கனடா, பிரேசில், மெக்சிகோ ஆகியவை. அவற்றுக்கு அடுத்து தென்கொரியாவும் வியட்னாமும் வருகின்றன.
அமெரிக்காவுக்கு ஆகப்பெரிய அலுமினிய ஏற்றுமதியாளராக கனடா விளங்குகிறது. 2024ன் முதல் 11 மாதங்களில் அமெரிக்காவின் மொத்த இறக்குமதிகளில் கனடா 79% பங்கு வகித்தது.
பதிலுக்குப் பதில் வரிவிதிக்கும் திட்டம் குறித்த மேல்விவரங்களைத் தெரிவிக்க, செவ்வாய் அல்லது புதன்கிழமை தாம் செய்தியாளர் கூட்டத்தை நடத்தப் போவதாக டிரம்ப் தெரிவித்தார். மற்ற நாடுகளுடன் அமெரிக்கா சமமாக நடத்தப்படுவதை உறுதிசெய்ய, பதிலுக்குப் பதில் வரிவிதிப்புக்கு திட்டமிடுவது குறித்து வெள்ளிக்கிழமை முதன்முதலில் தாம் சொன்னதாக அவர் கூறினார்.