இஸ்ரேலுக்கு 10 பில்லியன் டொலர் மதிப்புள்ள குண்டுகள், ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்
இஸ்ரேலுக்கு US$7.4 பில்லியன் (S$10 பில்லியன்) மதிப்புள்ள வெடிகுண்டுகளையும் ஏவுகணைகளையும் மற்றும் அவை தொடர்பான சாதனங்களையும் விற்பனை செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
காஸாவில் நடைபெற்ற போரின்போது அமெரிக்கத் தயாரிப்பு ஆயுதங்களையே இஸ்ரேலிய வீரர்கள் பயன்படுத்தினர்.
மொத்த ஆயுத விற்பனையில் US$6.75 பில்லியன் மதிப்பிலான வெடிகுண்டுகளையும் US$660 மில்லியன் மதிப்பிலான நவீன ஏவுகணைகளையும் விற்பனை செய்வதற்கான ஒப்புதல் பத்திரத்தில் வெளியுறவு அமைச்சு கையெழுத்திட்டு இருப்பதாக அமெரிக்கத் தற்காப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பு முகவை (DSCA) கூறியுள்ளது.
“அந்த உத்தேச வெடிகுண்டு விற்பனை தற்போதைய, வருங்காலச் சவால்களைச் சந்திப்பதற்கான இஸ்ரேலின் ஆற்றலை மேம்படுத்தும். உள்நாட்டு தற்காப்பை வலுப்படுத்தும். வட்டார அச்சுறுத்தல்களைத் தடுக்கும் கேடயமாகவும் அது விளங்கும்,” என்று அந்த முகவை தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
மேலும், இஸ்ரேல் தனது எல்லைகளையும் அத்தியாவசிய உள்கட்டமைப்புகளையும் மக்கள் நிரம்பிய மையங்களையும் பாதுகாக்கக்கூடிய இஸ்ரேலிய ஆகாயப் படையின் திறன்களை வலுப்படுத்த நவீன ரக ஏவுகணைகள் உதவும் என்றும் அது தெரிவித்து உள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகவும் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஆயுதம் விற்கப்படுவதை நாடாளுமன்றம் தடுக்காது என்றே தோன்றுகிறது.