VPN பயன்படுத்துபவரா நீங்க…? கூகுளின் பாதுகாப்பு அம்சம் இதுதான்..!
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/vpn.jpg)
சரியான ஆப்பை டவுன்லோடு செய்வதை எளிதாக்கும் வகையில், இந்த வெரிஃபைடு விபிஎன் ஆப்களை கூகுள் வழங்குவதாகவும், இந்த வெரிஃபைடு விபிஎன் ஆப்களை விளம்பரப்படுத்துவதன் மூலம் நிறுவனம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடிகளும், திருட்டுகளும் புதுப்புது முறைகளில் பொதுமக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன. அந்தவகையில் தொழில்நுட்பத்தின் தற்போதைய வளர்ச்சி, ஸ்மார்ட்போன் யூசர்கள் பலரையும் ஆன்லைன் மோசடிகளில் சிக்க வைக்கிறது. மோசடி கும்பல்களும், புதுப்புது திட்டங்களுடன் சாமானிய மக்களை குறிவைக்கிறார்கள்.
அந்த வகையில், பிளே ஸ்டோர் மூலம் சில மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் போலி ஆப்களால் பொதுமக்களின் தகவல்கள் திருடப்படுவதுடன், மூன்றாம் தரப்பு நபர் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனை ஹேக் செய்யும் செயல்முறைகளும் அரங்கேறி வருகின்றன.
இத்தகைய போலி ஆப்களின் அச்சுறுத்தல் தவிர்க்க முடியாத பிரச்சனையாக மாறிவிட்ட நிலையில், மக்கள் இதுபோன்ற போலி ஆப்களை டவுன்லோடு செய்வதை தடுக்க கூகுள் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், வெரிஃபைடு விபிஎன் (VPN) ஆப்களை பயன்படுத்த கூகிள் புதிய வசதியை கொண்டுவந்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவிலும், பிற நாடுகளிலும் உள்ள அரசாங்க ஆப்பில் இதே போன்ற பிரச்சனையை எதிர்கொண்ட நிலையில், தற்போது விபிஎன் ஆப்களில் இதே பிரச்சனை இருப்பதாக, கூகுளின் பாதுகாப்புக் குழு அதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
பாதுகாப்பான வழியில் விபிஎன் பயன்பாடு
உங்கள் ஐபி அட்ரஸை வெளிப்படுத்தாமல் அல்லது உங்கள் பகுதியில் பொதுவாக கிடைக்காத இணையதளங்களை பயன்படுத்த, பொதுவாக விபிஎன்-கள் அல்லது விர்சுவல் பிரைவேட் நெட்வொர்க் ஆப்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், இலவச விபிஎன் ஆப்களை பல நிறுவனங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு நபர்கள் வழங்கி வருகின்றனர். இதில் சரிபார்க்கப்படாத ஆப்பை டவுன்லோடு செய்யும் பட்சத்தில் தனிநபர் தகவல்கள் திருடு போக வாய்ப்புள்ளது. எனவே, இதனை தவிர்க்கும் விதமாக பாதுகாப்பான முறையில் விபிஎன் ஆப்பை டவுன்லோடு செய்யும் வழிகளை கூகுள் வழங்கி இருக்கிறது. இதன்மூலம், உங்களது ஸ்மார்ட்போன் மற்றும் உங்களின் தனிப்பட்ட பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.
கூகுளின், வெரிஃபைடு பேட்ஜ் போலி ஆப்களில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. அதன்படி, நீங்கள் ஒரு விபிஎன் ஆப்பை டவுன்லோடு செய்வதற்கு முன்பாக அதன் வெரிஃபைடு பேட்ஜை சரிபார்ப்பது மிகவும் முக்கியமாகும். பிளே ஸ்டோரில் நார்டு விபிஎன் (Nord VPN)-ஐ தேர்வு செய்து பார்க்கும்போது, அதன் முகப்பு பக்கத்தில் வெரிஃபைடு பேட்ஜ் இருப்பதை காணலாம். இதன்மூலம், இந்த ஆப் முற்றிலும் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். அதே நேரம் அந்த ஆப்பானது, பிளே ஸ்டோரின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவதையும் இது குறிக்கிறது.
சரியான ஆப்பை பதிவிறக்கம் செய்வதை எளிதாக்கும் வகையில், இந்த வெரிஃபைடு விபிஎன் ஆப்களை விளம்பரப்படுத்துவதன் மூலம் நிறுவனம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் ஏற்கனவே அரசு நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆப்களுக்கு ஜென்யூன் பேட்ஜ்களை வழங்குகிறது. நீங்கள் பிளே ஸ்டோரைத் திறந்து எம்ஆதார் (mAadhaar), டிஜி லாக்கர் (Digi Locker) அல்லது எம்பரிவாகன் (mParivahan) போன்ற ஆப்களை தேடும்போது, பட்டியலுக்குக் கீழே அரசின் ஐகான் இருப்பதை காண முடியும். நீங்கள் அந்த பேட்ஜை தொடும்போது, ஒரு செய்தியுடன் பாப்-அப் பாக்ஸ் ஒன்று தோன்றும். அதில் “பிளே வெரிஃபைடு செய்யப்பட்ட இந்த ஆப் அரசாங்க நிறுவனங்களுக்கு சொந்தமானது என்பதை அது உறுதிப்படுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.