மறுசீரமைப்புத் திட்டத்தில் அமெரிக்கா காசாவைக் கையகப்படுத்தி சொந்தமாக்கும் : டிரம்ப்
காஸா வட்டாரத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்னும் அதிரடி யோசனையை அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்கா வந்துள்ள இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவை வரவேற்றுப் பேசும்போது அவர் அந்த யோசனையை வெளிப்படுத்தினார்.
மேலும், போரால் சீர்குலைந்துவிட்ட வட்டாரத்தைவிட்டு பாலஸ்தீன மக்கள் வெளியேற வேண்டும் என்றும் எகிப்து, ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவர்கள் குடிபெயர வேண்டும் என்றும் முன்பு தெரிவித்த தமது கருத்தை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.அந்தக் கருத்தை பாலஸ்தீனர்களும் எகிப்து, ஜோர்டன் ஆகிய நாடுகளும் ஏற்கவில்லை.
வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை (4) நெட்டன்யாகுவுடன் இணைந்து டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“காஸா வட்டாரத்தை அமெரிக்கா கைப்பற்றும். அதனைச் சொந்தமாக்கிக்கொள்வதுடன் அங்கு நிறைய பணிகளைச் செய்ய உள்ளோம்.
காஸா வட்டாரத்தில் வெடிக்காத குண்டுகளை அப்புறப்படுத்துவோம். உருக்குலைந்த கட்டடங்களை அகற்றி, நிலப்பகுதியைச் சமப்படுத்துவோம்.அங்கு, ஏராளமானோருக்கு வேலைகளையும் வீடுகளையும் அளிக்கும் வகையில் பொருளியல் வளர்ச்சியை ஏற்படுத்துவோம் என்றார்.
ஆனால், அங்கு ஏற்கெனவே போராடி, பல உயிர்களை இழந்து, பரிதாபமான முறையில் வாழும் அதே மக்களை வைத்துக்கொண்டு அந்த சீரமைப்புப் பணிகளைச் செய்ய முடியாது.காஸா வட்டாரத்தில் வசிக்கும் இரண்டு மில்லியன் மக்கள் தங்களது இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு மனிதநேயமிக்க பிற நாடுகளுக்குக் குடிபெயர்வதே நல்லது, என்று டிரம்ப் கூறினார்.
பாலஸ்தீனர்கள் மீண்டும் காஸாவுக்குத் திரும்பி வந்து வாழ்வது போன்ற யோசனையை அவரது கருத்து உள்ளடக்கியதாகத் தெரியவில்லை.நெட்டன்யாகு கூறுகையில், “இஸ்ரேல் இதுவரை கண்டிராத ஆகச் சிறந்த நண்பர்,” என்று டிரம்ப்பைப் புகழ்ந்தார்.