இரு முறை காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியுள்ளது: இஸ்ரேல்
வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் வட காஸாவில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான முக்கிய சாலை ஒன்றை இஸ்ரேல் மூடியதாக பிபிசி போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டுவதைத் தொடர்ந்து அவ்வாறு நிகழ்ந்தது.
கடந்த 15 மாதங்களாக காஸாவில் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்களில் மேலும் நால்வர் விடுவிக்கப்பட்டனர் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், இஸ்ரேல் 200 பாலஸ்தீன சிறைக் கைதிகளை விடுவித்தது.
ஆனால், இஸ்ரேலிய பிணைக்கைதி ஆர்பெல் யெஹுட்டை விடுவிக்கத் திட்டங்கள் வரையப்படாத வரை விடுவிக்கப்பட்ட காஸா மக்கள் வட காஸாவுக்குத் திரும்ப அனுமதி வழங்கப்படாது என்று இஸ்ரேலிய அரசாங்கம் எடுத்துரைத்தது. ஆர்பெல் யெஹுட் உயிருடன் இருப்பதாகவும் அவர் அடுத்த வாரம் விடுவிக்கப்படுவார் என்றும் ஹமாஸ் வலியுறுத்தி வருகிறது.
மத்திய காஸாவில் அல்-ரஷிட் எனும் சாலையில் வீடு திரும்பும் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் சிலர் காயமுற்றதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சையும் பாலஸ்தீன ஊடகங்களையும் மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
சனிக்கிழமையன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டபோது அவர்களை வரவேற்க டெல் அவிவ் நகரில் மக்கள் உற்சாகத்தில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டது நேரடியாக ஒளிபரப்பப்படுவதைக் காண மக்கள் பலர் பொது சதுக்கம் ஒன்றில் திரண்டனர்.
ஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்கீழ் தாங்கள் பிணை பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பும் தங்கள் சிறைகளில் வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை இஸ்ரேலும் விடுவிக்க ஒப்புக்கொண்டன. சென்ற வாரம் ஹமாஸ் மூன்று பிணைக்கைதிகளை விடுவித்தது.
முன்னதாக 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடப்புக்கு வந்த ஒரு வார கால போர் நிறுத்தத்தின்போது 100க்கும் மேலான பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.