இந்த அறிகுறிகள் இருந்தால் அவதானம் – வைட்டமின் டி குறைபாடாக இருக்கலாம்

உடலின் சீரான செயல்பாட்டிற்கு பல வித ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. பல்வேறு வைட்டமின்கள், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து என இவை அனைத்தும் உடலில் சீரான செயல்பாட்டிற்கு தேவை.
வைட்மின்களில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. நீண்ட காலத்திற்கு நோய்களிலிருந்து விலகி இருக்க விரும்பினால், உணவில் வைட்டமின் டி மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாடு கண்டிப்பாக இருக்கக்கூடாது.
வைட்டமின் டி இன் மிகப்பெரிய ஆதாரம் சூரிய ஒளி ஆகும். எலும்புகள், தசைகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க வைட்டமின் டி அவசியம். வைட்டமின் டி உங்கள் உடலில் உள்ள எலும்புகளுக்கு கால்சியத்தை கொண்டு செல்வதற்கும் உதவுகிறது. இந்தியாவில் 70 முதல் 90 சதவீதம் பேர் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.
வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளை பலர் பொதுவாக கவனிப்பதில்லை. இதற்கான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் உடல் நமக்கு சில அறிகுறிகளை காட்டுகிறது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்:
சோர்வான உணர்வு (Fatigue)
உடலில் வைட்டமின் டி குறைபாடு இருந்தால், அதன் காரணமாக, எப்போதும் சோர்வான உணர்வும் பலவீனமும் இருக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இது வைட்டமின் டி குறைபாட்டின் மிகப்பெரிய அறிகுறியாகும். ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொண்டு, போதுமான தூக்கம் இருந்தும் பலவீனம் மற்றும் சோர்வான உணர்வு இருந்தால், அது வைட்டமின் டி குறைபாட்டின் காரணமாக இருக்கலாம். இரத்தப் பரிசோதனைக்குப் பிறகு, உடலில் வைட்டமின் குறைபாடு உள்ளதா இல்லையா என்பது தெரியும்.
இடுப்பு மற்றும் முதுகு வலி (Pain)
எலும்புகள், தசைகள் மற்றும் பற்களை வலுப்படுத்த கால்சியம் முக்கியமானது. ஆனால் உடலில் வைட்டமின் டி குறைபாடு இருந்தால், கால்சியம் உடலில் உறிஞ்சப்படாது. கால்சியத்தை சரியாக உறிஞ்சுவதற்கு உடலுக்கு வைட்டமின் டி தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால், எவ்வளவு கால்சியம் உட்கொண்டாலும் முதுகுவலி பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். ஆகையால் இடுப்பு மற்றும் முதுகில் ஏற்படும் வலியை வைட்டமின் டி குறைபாட்டின் முக்கிய அறிகுறியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
கவலை மற்றும் மோசமான மனநிலை (Mood Swings)
மனதில் கவலை அல்லது எப்போதும் மனச்சோர்வு இருந்தால், அது வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். மனநிலை மோசமாக இருந்தால், உங்கள் உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படக்கூடும். பல நேரங்களில் வீட்டில் சூரிய ஒளி இல்லாத போதும், மனச்சோர்வு நீடிக்கிறது. மனநிலையை புத்துணர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் வைத்திருக்க காலை சூரிய ஒளியில் தொடர்ந்து சிறிது நேரம் உட்காருவதும் நடப்பதும் நல்லது. மேலும், வைட்டமின் டி பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும்.
அதிகப்படியாக முடி உதிர்தல் (Hair Fall)
பெரும்பாலும், வைட்டமின் டி குறைபாடு அதிகப்படியான முடி உதிர்வை ஏற்படுத்துகிறது. ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதால் முடி உதிர்தல் ஏற்படுகிறது என்று பல நேரங்களில் நாம் நினைக்கிறோம், ஆனால் அது இந்த வைட்டமின்களின் குறைபாட்டின் காரணமாகவும் இருக்கலாம். வைட்டமின் டி குறைபாடு காரணமாக முடி அதிகமாக உதிரத் தொடங்குகிறது. கூந்தல் அதிகமாக உதிர்ந்தால், கண்டிப்பாக வைட்டமின் டி சோதனை செய்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.