உலகளவில் திடீரென முடங்கிய ChatGPT
ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் 2022 நவம்பர் மாதம் சாட் ஜிபிடி (ChatGPT) என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. செயற்கை நுண்ணறிவு துறையில் புதிய திருப்புமுனையாக கருதப்படும் சாட் ஜிபிடி உலகம் முழுவதும் உள்ள இணையதள வாசிகளை கவர்ந்தது.
சக மனிதரை போல உரையாடுவது, எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்வது, கோடிங் செய்வது, கட்டுரை எழுதுவது, கடிதம் எழுதுவது, கவிதை எழுதுவது என சர்வ வேலைகளையும் சாட் ஜிபிடி உடனடியாக செய்து முடிக்கிறது என்பதோடு, கல்விக்கும் சாட் ஜிபிடி கைகொடுக்கும் என்பதால் மாணவர்கள் இடையேயும் இதன் வரவேற்பு அதிகமானது.
சமீபத்தில் ஓப்பன்ஏஐ பயன்படுத்தி ஒருவர் ஆயிரம் வேலைகளின் இண்டர்வியூகளுக்கு விண்ணப்பத்ததாகவும், அதில் 50 வேலைகளுக்கு நேர்காணல் சென்றதாகவும் வெளிப்படுத்தியது அதன் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.
இப்படி உலகளம் முழுவதும் டிஜிட்டல் முன்னேற்றத்தின் புதிய ஹீரோவாக விளங்கிவரும் ஓப்பன்ஏஐ-ன் அம்சமான சாட்ஜிபிடி திடீரென முடங்கியதாக அதன் பயனர்கள் பதிவிட்டனர். இது சமீபத்திய ஓப்பன்ஏஐ-ன் தொழில்நுட்ப முடக்கத்தை தொடர்ந்து நடந்துள்ளதால் ’மீண்டும் மீண்டுமா’ என அதிக பேசுபொருளாக மாறியுள்ளது.
உலகம் முழுவதும் திடீரென சாட்ஜிபிடி செயல்படாமல் போனது அதன் பயனர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. பலர் என்ன செய்வது என்பது தெரியாமல் சமூகவலைதளங்களுக்கு விரைந்து, சாட்ஜிபிடி செயல்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்தனர்.
ஒரு பயனர் கூறுகையில், “chatgpt தயவு செய்து விரைவில் சரிசெய்யவும் எங்கள் ஹிஸ்ட்ரி உங்கள் கையில் உள்ளது, எங்களுக்கு எங்கள் ஹிஸ்ட்ரி தேவை” என்று ஒரு பயனர் எழுதினார்.
மற்றொரு பயனர், கவலையை வெளிப்படுத்தி, “இரண்டாவது மூளை வேலை செய்வதை நிறுத்தியது! ChatGPT செயலிழந்தது! #chatgptdown” என்று எழுதினார்.
கடந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு இரண்டுமுறை ஓப்பன்ஏஐ சேவைகள் முடங்கியுள்ளது பயனர்களை கவலையடைச்செய்துள்ளது. இதில் இந்தமுறை ஏற்பட்டது தான் தீவிரமானது என்று சொல்லப்படுகிறது.
செயலிழப்பைக் கண்காணிக்கும் சேவையான டவுன்டெக்டரின் கூற்றுப்படி, ChatGPT ஆஃப்லைனில் இருப்பது குறித்த புகார்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, 1,000 அறிக்கைகளுக்கு மேல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரச்னையை சரிசெய்வதில் வேலை செய்துவருவதாக ஓப்பன்ஏஐ தெரிவித்துள்ளது.