இலங்கை – ”எனது உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்” – நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா ஆவேசம்!
இலங்கை – இன்று முதல் ஆளும் கட்சிக்கு ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
36 நாட்களுக்குப் பிறகு இன்று நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், அரசாங்கம் நீதி வழங்கும் என்று தான் நம்பியதாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற அவைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பேசுவதற்கு நேரம் ஒதுக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு அல்ல, எதிர்க்கட்சியின் பொறுப்பு என்று கூறினார்.
இது குறித்து சபாநாயகரிடம் பலமுறை தெரிவித்துவிட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினரின் பேச்சுரிமைக்கு அரசாங்கம் துணை நிற்கிறது என்றும் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், எதிர்க்கட்சி சார்பாக பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுடனும் பேசியதாகவும், நேரத்தையும் பேசுவதற்கான இடத்தையும் நியாயமாக ஒதுக்க நடவடிக்கை எடுத்ததாகவும் கூறினார்.
இந்நிலையில் இன்றைய அமர்வில் கருத்து வெளியிட்டுள்ள அர்ச்சுனா, “இந்த முறை நான் ஒரு சாதாரண எம்.பி. ஆனேன். அதற்கு முன், நான் ஒரு டாக்டராக இருந்தேன். ஊடகங்களில் எனது நடத்தை குறித்து ஏதேனும் புகார்கள் வந்துள்ளனவா? அரசியலில் நுழைவதற்கு முன்பு வழக்குகளில் சிக்கியிருக்கிறேனா? கண்டுபிடியுங்கள்.
எனக்கு ஏன் நேரம் கொடுக்கப்படவில்லை? நான் சித்திரவதைக்கு ஆளாகிறேன். நான் ஒரு விடுதலைப் புலி என்றால், என்னைக் கைது செய்யுங்கள். அல்லது என்னைச் சுடுங்கள்.
மன்னாரில் நீதிமன்றத்திற்கு முன்னால் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். தெஹிவளையில் ஒருவர் கொல்லப்பட்டார். அவர்கள் என்னைக் கொன்றால், அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.